தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக வடகிழக்கு பருவமழை துவங்கி கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக  ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல பகுதியில் பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 பொதுப்பணித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 24 ஏரிகள் முழு கொள்ளளவும் 24 ஏரிகள் 75 சதவீதமும் எட்டி உள்ளது. நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 90 மில்லி மீட்டர் ,ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.



மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னையின் குடிநீர் ஆதாரமாக பெரிதும் விளங்கி வரும் நிலையில், தற்போது அந்த அணைக்கு சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, நேற்று மாலை நேரில் இருந்து சுமார் 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

 

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் நகரில் மழைநீர் கால்வாய்கள் கடந்த ஒரு மாதமாகவே கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் தேங்கியிருந்த நீர் தற்போது இந்த மழை நீர் கால்வாய் மூலம் நிலத்தடி நீர் சேமிப்பு , திருக்குளங்களுக்கு செல்கிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குபட்ட11வது வார்டான காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில்  மழை நீர் திருமலைராஜா தெரு சாலை சந்திப்பில் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் சண்முகநாதன், மாநகராட்சிக்கு புகார் தெரிவித்து இதனை சரி செய்ய கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சியின் அடைப்பு நீக்கும் இயந்திரம் உதவியுடன் அருகில் இருந்த மழைநீர் சேமிப்பு கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் பகுதி நீக்கி சில நொடிகளிலே சாலையில் தேங்கி இருந்த நீர் ஆறு போல்  கொட்ட தொடங்கியது. இதனை கண்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பகுதி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். 



 

புகார் அளித்த சில மணி நேரங்களிலே பழுது நீக்கி சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றிய மாநகராட்சியின் பணியை அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தும் மக்களின் தேவைகளை உடனடியாக தெரிவித்து அதற்கான தீர்வு கண்டதும் , அதற்கு உறுதுணை புரிந்த மாநகராட்சி மேயர் ,  ஆணையர் , துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பெரிதும் பாராட்டி வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த மேயர் ,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் என இருக்கும் நிலையில் அந்தப் பகுதி வார்டு உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்றாலும் மாநகராட்சியின் செயலை பாராட்டிய விதம் அனைவரையும் கவர்ந்து உள்ளது.