வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மட்டும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : காஞ்சிபுரம் : தரைப்பாலங்களில் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் அவதி.. கோரிக்கை என்ன?


மேலும் படிக்க : Rain: புதுச்சேரி, விழுப்புரம், கடலூரில் அடித்து வெளுக்கும் கனமழை....இயல்பு வாழ்க்கை பாதிப்பு