இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன.
 
நீட் தேர்வுக்கு முதல்நாளே தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவியும், 1 5ஆம் தேதி சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
 
 
நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன், சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் இவரது மகள் அனு 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது மனைவி ஷிபா, இவரும் மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். 
 
இந்த நிலையில் அணு கடந்த 12 ஆம் தேதி ஆவடி நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய அணு , தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை ,ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு ஆறுதல் கூறினார் . இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பாக காணப்படுகிறது.
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .