கடலூர் அருகே உள்ள எஸ்.என்.சாவடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (47). அதே பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார் மேலும் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆவார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் தனது மகளை கூட்டிக்கொண்டு அங்கே விட்டு வருவர்தற்காக குடும்பத்துடன் சென்று உள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது பற்றி உடனடியாக முகமது இஸ்மாயிலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னையில் இருந்து வந்த அவர் தனது வீட்டுக்குள்சென்று பார்த்து உள்ளார்.

 



 

வீட்டின் பூட்டு திறந்து கிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார் பின் உள்ளே சென்று பார்த்தார் அங்கே அவரது வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் அவர் வைத்திருந்த 2 சவரன் நகை, 20 ஆயிரம், 750 கிராம் வெள்ளி ஆகிய பொருட்களை காணவில்லை. அங்கு யாரோ அடையாளம் தெரியாத நபர்கள், முகமது இஸ்மாயில் சென்னை சென்றதை அறிந்து, சரியான நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். இது பற்றி முகமது இஸ்மாயில் உடனடியாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு, அவர்கள் வீட்டில் இருந்த முக்கிய ரேகைகளை பதிவு செய்தனர்.



 

இதேபோல் மற்றொரு வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. கடலூர் செம்மண்டலம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி சுமதி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்ததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 2 செல்போன்களை திருடிச்சென்று உள்ளனர். இது பற்றி புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ஒரே மாதிரியாக இருவரது வீட்டில் உள்ளவர்கள் சென்னைக்கு சென்றதை அறிந்து அவர்கள் வீட்டில் இல்லாததை அறிந்துகொண்டு தான் வந்துள்ளனர். இது மேலும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆதலால் உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வீட்டில் திருடியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.