Radhe Shyam Review: ட்ரெய்லரில் தெரிந்துவிட்டது.... இது ஒரு ரொமான்ஸ் திரைப்படம் என்று. படம் தொடங்கியதுமே... கை ரேகை சாஸ்திரங்களின் பிதாமகனாக இருக்கும் சத்யராஜை, விண்வெளி ஆராய்ச்சி குழு சந்திக்கிறது. ‛தெரியாததை அறிய வேண்டியது அறிவியல்... தெரியாததை பொய் என்று சொல்வதில்லை அறிவியல்’ என சத்யராஜ் பேசும் டயலாக்கோடு தொடங்குகிறது படம். அவரது ஒரே சீடன், கைரேகை ஜோதிட நிபுணரான பிரபாஸ்(Prabhas). 


ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் இருக்கிறார். லண்டன்... பின்னர் இத்தாலி ஆகிறது, ரோம் ஆகிறது... இன்னும் பிற நாடுகளாகவும் ஆகும். ஜோதிடர் என்பதற்கான எந்த அறிகுறியும், அவரது உடையிலும், உடல் மொழியிலும் இருக்காது. ட்ரிப் வந்த கல்லூரி மாணவன் மாதிரி, டேட்டிங , மீட்டிங் என ஓடிக் கொண்டிருப்பார். திடீர் சந்திப்பில் பூஜா ஹெக்டேவை(Pooja Hegde) பார்த்ததும் காதல். 


காதல் ரேகை தனக்கில்லை என்று கூறிக்கொள்ளும் பிரபாஸ்(Prabhas) காதலில் விழுந்தாரா, ‛அல்பாயஸ்’ ரேகை பெற்ற காதலி பூஜாவை கரம் பிடித்தாரா என்பது தான் ராதே ஷியாம். இந்தியாவில் ஒரு காட்சி கூட படமாக்கப்பட்டதாக தெரியவில்லை. 1976 ல் தொடங்கும் ‛ப்ரீயட் ப்லீம்’ . அதற்கு ஏற்றபடி அனைவரின் அலங்காரங்கள், ரம்யமான பகுதிகள், மாடமாளிகைகள் என எல்லாமே பிரம்மாண்டம். 


பூஜா... பூத்துக்குலுங்கும் நந்தவனமாக படம் முழுக்க வருகிறார். பாகுபலியாகவே இன்னும் பிரபாஸை பார்ப்பதால், அவரது அமைதியான கதாபாத்திரம், ஏனோ இன்னும் நெருக்கம் தர மறுக்கிறது. கட்டப்பா சத்யராஜ், ஒரு செட்டப்பா வந்து போகிறார். ஆனால், அவரது அலங்காரம், இதுவரை இல்லாத புது ரகம். கை ரேகை, கால ஓட்டம், எதிர்காலம், ஆன்மிகம், அறிவியல் என படம் தொடங்கியதும், வேறு ஏதோ ஒரு ஜானரில் படம் போகும் என்று தான் தொடக்கத்தில் இருந்தது. ஆனால் படத்தின் பயணம், அந்த பாதையில் செல்லவில்லை. இருந்தாலும், அவ்வப்போது அந்த நிறுத்தத்தில் நின்று தான் சென்றது. இறுதியில் முன்பு கூறிய, அதே ஆன்மிகம், அறிவியலோடு முடித்தாலும், பிரதானம் என்னவோ காதல் தான். 


விதியை மாற்ற முடியாது என்று அவர்கள் தான் கூறுகிறார்கள். அதே அவர்கள் தான், விதியை மாற்ற முடியும் என முடிக்கிறார்கள். காரணம், காதல் என்கிறார்கள். பகைக்க முடியாத காரணம் என்பதால், அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம். கை ரேகை போல முதல் பாதி எங்கெங்கோ போகிறது. கதை என்னவாக இருக்கும் என்பதே இடைவெளியின் போது தான் அறிய முடிகிறது. 


பூஜாவுக்கு அல்பாயிசு என்கிற ட்விஸ்ட் முடிவதற்குள், பிரபாஸிற்கு தான் அல்பாயிசு என்கிற ட்விஸ்ட் வேறு ரகம். படத்தில் ஏதாவது ஒரு காட்சி அல்லது சில காட்சிகள் பிரம்மாண்டமாய் வருவது வழக்கம். ஆனால், இந்த படம்... முழுக்கவே பிரம்மாண்டம் தான். காலம், ஒரு காதலை எப்படி இணைக்கிறது என்பதை , காலம் காலமாக சொல்லும் பார்மட்டில் தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு வித மென்மை இருக்கிறது. காதல் என்றாலே, மென்மை தானே! காமெடி இல்லை, ஆக்ஷன் இல்லை, வில்லன் இவர் தான் என்று நினைத்தால், அவர் வில்லனும் இல்லை. இப்படி, கமர்ஷியல் சினிமாவில் கட்டாயம் இழுத்து வரப்படும் காமெடி, ஆக்ஷன், வில்லனை தவிர்த்ததே பெரிய சாதனை தான். ஒரு படம் முழுக்க அத்தனை பேரும் பாசிட்டிவ் கேரக்டராக இருக்கும் போது, நெகட்டிவ் எண்ணம் நமக்கு வருவது குறைவு தான். ஆனால், முதல் பாதியின் நீளமும், தூரமும் கொஞ்சம் நெகட்டிவ் எண்ணத்தை தருகிறது. 


Also Read | Maaran Review: மாறன் படத்தை மாறி மாறி பார்க்க முடியுமா? தனுஷ் படத்தில் இது ஒரு தினுசு... சுடச்சுட சுட்டிக்காட்டும் விமர்சனம் இதோ!


ராதாகிருஷ்ணகுமாரின் இயக்கத்தை பார்க்கலாம், ஜஸ்டின் பிரபாகரன் இசையை கேட்கலாம். ஆனால் முழு ஸ்கோர் வாங்குவது ஒளிப்பதிவாளர் மனோஜ் மற்றும் பின்னணியில் பின்னி எடுத்த தமனை தான். படம் முழுக்க தமன் மயம். இரண்டாம் பாகத்தில் இருந்த வேகத்தை, முதல் பாகத்தில் காட்டியிருந்தால், ராதே ஷியாம் இன்னும் ஒளிர்ந்திருக்கும். குறைகள் இல்லை என்று சொல்ல முடியாது... அந்த குறைகளை எல்லாம் காதலின் பின்புறம் ஒழிய வைத்ததால், தப்பித்திருக்கிறார்கள். வெயிலில் ‛வாஃம்’ அதிகம் இருப்பதால், ராதே ஷியாம்(Radhe Shyam) பார்க்க கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது. ஒரு முறை பார்க்கலாம். 


Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!