Maaran Movie: நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே தனுஷ் நடிப்பில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது மாறன்(Maaran). நேர்மையான பத்திரிக்கையாளரை, அவரது செய்திக்காக வெட்டிக் கொலை செய்கிறது ஒரு கும்பல். அதே நாளில் அதே நேரத்தில் அவரின் மனைவிக்கு பிரசவம். குழந்தை பிறந்து, தாய் இறக்கிறார். அவர்களின் மகன், பிறந்த அந்த பெண் குழந்தையை தன் தாய் மாமன் உதவியோடு வளர்க்கிறார். அந்த சிறுவன் தனுஷ். தந்தையை போலவே, நேர்மையான ஊடகவியலாளராக பணி செய்யும் தனுஷ்(Dhanush) முன்னாள் அமைச்சரான சமுத்திரகனியின் இடைத் தேர்தல் ஆசைக்கு இடையூறாக வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனுஷ் தங்கை தீயிட்டு கொளுத்தப்படுகிறார்.
தங்கை இறப்பிற்கு காரணமான மாஜி அமைச்சரை ஆதாரத்தோடு பிடிக்க, தன் இன்ஸ்பெக்டர் நண்பருடன் சேர்ந்து களத்தில் இறங்குகிறார் தனுஷ். இறுதியில் குற்றவாளி பிடிபட்டாரா, என்னென்ன ட்விஸ்ட் ஏற்படுகிறது என்பது தான் மாறன் கதை. சந்தேகம் முழுக்க முன்னாள் அமைச்சர் சமுத்திரகனி மீது இருக்க, திடீரென அவருக்கும் இதற்கும் தொடர்பில்லை, அந்த சம்பவத்திற்கு வேறு காரணங்களும், வேறு நபர் ஒருவரும் தான் காரணம் என்கிற ட்விஸ்ட் , உண்மையில் பெரிய ட்விஸ்ட் தான். ஆனால், அதை கடைசி நேரத்தில் அவிழ்த்திருக்கிறார்கள். இதனால் படம் முடியப் போகிறது என்று எதிர்பார்த்த நேரத்தில், அது மீண்டும் தொடரும் உணர்வை தருகிறது.
ஒரு ஊடகவியலாளரின் நேர்மையான பணியை மையமாக வைத்து தொடங்கும் பணியில், ஒரே ஒரு சம்பவத்தை வைத்து அதனால் அந்த செய்தியாளர் சந்திக்கும் பிரச்சனைகளை கூறுகிறார்கள். முடிக்கும் போது, உண்மை செய்தியை வெளியிட்ட செய்தியாளரை, ‛நீ செய்தி போட்டதால் என் குடும்பம் பாதித்தது...’ என குற்றவாளி வசனம் பேசுவதும், அதற்கு அவர் நியாயம் கற்பிப்பதும், அதை கேட்டு தனுஷ் தலை குணிவதும், அந்த செய்தி வெளியிட்டதை தேசக் குற்றம் போல சித்தரிக்க முயன்றதாக தெரிகிறது . இது கட்டாயம் கண்டிக்க வேண்டிய செயல். குற்றங்களை தோலுரிக்கும் செய்தியாளர்கள், குற்றவாளிகளிடம் உணர்வுகளுக்கு இடமளிக்க முடியாது. அளிக்கவும் கூடாது. அப்படி இருக்க, ஒரு குற்றவாளியின் குற்றத்தை வெளியிட்டத்தை நியாயமாக்க முயற்சித்த இயக்குனரின் கற்பனை கண்டிக்கத்தக்கது.
இயல்பான அண்ணன் தங்கையாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். அவர்களின காட்சிகள் உணர்வுபூர்வமாக உள்ளன. அதே நேரத்தில் உடன் பணியாற்றும் மாளவிகா உடனான காதலில், தனுஷ்-மாளவிகா இடையே அவ்வளவு நெருக்கம் இல்லை. அவர்களின் நெருக்கம் எடுபடவும் இல்லை. ஜிபி.பிரகாஷின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியும் கூட. இயக்குனர் கார்த்திக் நரேன், திரைக்கதையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஆனால், கதைக்குள் வர சிறிது நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. மற்றபடி யூகிக்க முடியாத காட்சிகளும் இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது.
விவேகானந்த் சந்தோசத்தின் ஒளிப்பதில் பளிச்சென இருக்கிறது. பிரசன்னாவின் கத்திரி இன்னும் கூட கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். சத்யஜோதி ப்லிம்ஸ் கடைசியாக எடுத்த சில படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அந்த வரிசையில் மாறன், கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது. த்ரில்லருக்கு தேவையான விசயங்கள் படத்தில் இருப்பதால், சில குறைகளை எளிதில் கடக்க முடிகிறது. இன்னும் கூட செய்தியாளரின் வாழ்வியலை ஆய்வு செய்து, படமாக்கியிருக்கலாம். கொஞ்சம் செயற்கை தனத்தை தவிர்த்திருக்கலாம் . ஓடிடியில் வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து , பிடித்த சீன்களை ரசித்தும், பிடிக்காத சீன்களை ஓட்டி விட்டும் மாறனை பார்க்கலாம்.