Etharkkum Thunindhavan Review:  கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை மாதிரி ஒரு குடும்ப படத்தை இயக்குனர் பாண்டியராஜ் தந்திருப்பார் என எதிர்பார்த்து உள்ளே சென்றால், எடுத்ததுமே கொலையும், ரத்தமுமாய் தொடங்குகிறது எதற்கும் துணிந்தவன்(Etharkkum Thunindhavan). ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தான் கதையின் களம் என்கிறார்கள். அங்குள்ளதாக கூறப்படும் வட நாடு மற்றும் தென் நாடு என்ற இரு கிராம பகுதிக்கு இடையே இருக்கும் உறவும் உரசலும் தான் கதையின் கரு. படம் தொடங்கியதும்,  3 அல்ல 5 என கொலையின் எண்ணிக்கையோடு ஓபனிங் திறந்து, ஏன் இந்த கொலைகள் என திறக்கிறது பிளாஷ்பேக். 


கதையின் களம் ராமநாதபுரம் என்கிறார்கள். வரண்ட பகுதியையும், வளர்ந்த கருவேல மரங்களை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ராமநாதபுரத்தை , பெங்களூரு சிட்டி போல காட்டிய இயக்குனர் பாண்டியராஜின் கற்பனை வளத்தை பாராட்டலாம். வட நாடு மற்றும் தென் நாடு என பிரித்துக் காட்டுவதற்காக சீன் பை சீன் கார்டு போடுவதெல்லாம் எரிச்சலூட்டுகிறது. வில்லனாக வரும் வடநாட்டைச் சேர்ந்த வினய், தன் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு மிகப்பெரிய செல்வந்தர்களுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடுவதும், அடுத்த சில நொடிகளில் அதே வினய் கிராம மக்களுடன் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி பார்ப்பதும் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீராய் தெரிகிறது. 


நாடக காதலில் பெண்களை ஏமாற்றி அவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பலிடமிருந்து கிராம பெண்களை சூர்யா காப்பாற்றுவதுதான் படத்தின் வேர் கதை. அதை கதை சொல்கிறோம் என்கிற பெயரில் தலையைச் சுற்றி மூக்கைத் தொட நினைத்து, மூக்கிற்கு பதிலாக வாயில் விரல் வைத்து அதை கடித்து வலி வர வைத்திருக்கிறார்கள். சூர்யா பெரிய வக்கீலா? கிராம சமூக தொண்டரா? விவசாயி மகனா? இதில் அவர் யார் என்பதை, கடைசிவரை யூகிக்க முடியாமல்... அனைத்துமே அவர்தான் என ஏற்றுக்கொள்ள வைக்கிறார் இயக்குனர். பிரியங்கா மோகனை கடத்துவதாகக் கூறி அவரை திருமணம் செய்யும் ட்விஸ்ட்டைத் தவிர படத்தில் வேறு எந்த ட்விஸ்ட்டும் இல்லை. 



சூர்யா கோபப்படுவதும், கொதிப்பதும், காதலிப்பதும்... பின்னர் மீண்டும் கோபப்படுவதும் கொதிப்பதும் காதலிப்பதுமாய் ரிபீட் ஆகி கொண்டே இருக்கிறார். சீரியசாக போகும் இடத்தில் கூட திடீரென ரொமான்ஸ் காட்சிகளை வைத்து சீரியஸ் காட்சிகளின் வீரியத்தை அவர்களே குறைத்திருக்கிறார்கள். 
கையை தொட்டால் பாடல், காலை தொட்டால் பாடல் என கம்போஸ் செய்த அனைத்து பாடல்களையும், அங்கங்கே அப்பி ஒட்டியிருக்கிறார்கள். அவையெல்லாம் தேவையில்லாத ஆணியாகவே தெரிகிறது. 


ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருமே விஐபிகள் என்றால் யார்தான் பொதுமக்கள்? பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டும் எத்தனையோ படங்களை தமிழ் சினிமா பார்த்துவிட்டது. பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு. படத்தில் வேறு எந்த புதுமையும் இல்லை. சூர்யா கோர்ட் போடுவார் இல்லையென்றால் வேட்டி கட்டுவார். கோர்ட் போட்டுக் கொண்டால் வேறு ஒருவர் ஜட்ஜ், வேஷ்டி கட்டினால் அவரே ஜட்ஜ். இந்த ஒரு வசனத்தை வைத்து படம் முழுக்க ஓட்ட நினைத்திருக்கிறார்கள். சமூகத்தில் இன்றும் நடக்கும் பெரிய பிரச்சனை தான். ஆனால் அதை தெளிவாக சொல்லவில்லை அல்லது சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். படத்தின் ஒரே ஆறுதல் பிரியங்கா மோகன். டாக்டரில் பார்த்தபோது பளபளப்பாக இருந்தவர், இதில் சில நேரங்களில் பேஷண்ட் ஆக தெரிகிறார். ஆனாலும் அவரை ரசீதை ஆக வேண்டிய கட்டாயம்.



இயக்குனர் பாண்டியராஜ் குரிய அடையாளமாக கதாபாத்திரங்களின் பெயர்களும், நகைச்சுவையும் மட்டுமே இதில் பார்க்க முடிகிறது. மற்றபடி படம் முழுக்க சூர்யா மட்டுமே பயணிக்கிறார். அதனால் அதை அவர் படமாக மாறி விட்டது. சூரியை கூட பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. எப்போதாவது அவர் வரும்போது, 'ஓ...இவரும் படத்தில் இருக்கிறாரோ...' என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.


அதே நேரத்தில் சரண்யா, இளவரசு, சத்யராஜ், புகழ், தேவதர்ஷினி ஆகியோரின் வழக்கமான காமெடியும் பெரிய அளவில் எடுபடவில்லை. குற்றவாளிகளை கொலை செய்த குற்றத்தை தடுக்கிறார் கதாநாயகன். கதாபாத்திரத்தின் பெயர் கண்ணபிரான். கொலைகளுக்கு பின் அவரை அவதாரம் என்கிறார்கள். மீண்டும் கண்ணபிரான் வருவார் என்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது மீண்டும் தியேட்டருக்கு நாம் வருவோமா என்பது சந்தேகமே.


இமானின் இசையும் பின்னணியும் எந்த இடத்திலும் பொருந்தவில்லை. காரணம் இது இமானுக்கான கான படம் இல்லை. கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் ஆறுதலை அளித்தாலும், அதிக ஸ்லோ மோஷன் , நம்மையும் slow-motion க்கு கொண்டு செல்கிறது. குடும்பப் படமாகவும் இல்லாமல், அறிவுரை சொல்லும் படமாகவும் இல்லாமல், ஆக்சன் படமாகவும் இல்லாமல், எதற்கும் துணிந்து படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ படத்தின் பெயர் எதற்கும் துணிந்தவன். சமூகத்தின் மீது வைக்கும் அக்கறையை கொஞ்சம் திரைக்கதை மீதும் வைத்திருந்தால், படம் கொஞ்சம் பார்க்கும்படியாக இருந்திருக்கும்.


Also Read | Maaran Review: மாறன் படத்தை மாறி மாறி பார்க்க முடியுமா? தனுஷ் படத்தில் இது ஒரு தினுசு... சுடச்சுட சுட்டிக்காட்டும் விமர்சனம் இதோ!