சிதம்பரத்தை விட்டு கிளம்பும் போது காலை சிற்றுண்டி சாப்பிடாமல் விரதம் இருந்து கிளம்ப வேண்டும். இந்த விரதத்திற்கு புத்தூர் விரதம் என்று பெயர். சீர்காழி அருகில் இருக்கும் புத்தூர் கிராமத்தில் விறகு அடுப்பில் விரதச் சாப்பாட்டை ஜெயராமன் தனது படையுடன் தயாரித்து தயாராக வைத்திருப்பார். 50 வருடங்களாக செயல்பட்டு வரும் புத்தூர் ஜெயராமன் கடை தமிழகத்தின் உணவு வரலாற்றில் ஒரு மைல் கல். இந்தக் கடை வாசலில் நிற்கும் கார்கள், இரு சக்கர வாகனங்கள், உள்ளே நுழைய காத்திருக்கும் கூட்டம் அனைத்தையும் பார்த்து நீங்கள் பயம் கொள்ளக் கூடாது.  ஒரு பெரும் தரிசனத்திற்காக நாம் காத்திருக்கத்தானே வேண்டும்.




Kola Pasi Food -3: பல்லவர் நாட்டில் ஒரு கடலோரப் பயணம் -  பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் வரை ஒரு உணவு உலா


இந்த தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டு கூட எளிதாக கிடைக்கும் ஆனால் இந்த கடையில் ஒரு இடம் பிடித்து அமர்வதற்குள் அருகில் இருக்கும் கொள்ளிடத்தில் குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். உலக அளவில் செய்யப்படும் இறால் உணவுகளில் இந்தக் கடையில் செய்யப்படும் வெள்ளை இறால் தொக்கு முக்கிய இடத்தை பிடிக்கும். இறால் தொக்கு, மீன் தவா ஃப்ரை, போன்லெஸ் சிக்கன், லெக் பீஸ் என இவை அனைத்தையும் ஆர்டர் செய்து கொஞ்சம் சாதத்தை இவைகளுக்கு சைடிஷ் மாதிரி சாப்பிட்டு விட்டு, கடைசியாக ஜெயராமன் அண்ணன் கொடுக்கும் கெட்டித் தயிரை சாப்பிட்டால், உடன் விரதம் திவ்யமாக நிறைவு பெறும். கும்பகோணத்தில் இட்லிக்கு தொடுகறியாக கடப்பா தருவார்கள், கிடைத்தால் கொஞ்சம் புளி சுண்டல் அல்லது புளி சொஜ்ஜி மறவாமல் சாப்பிட்டு பாருங்கள். இவை இந்த ஊருக்கே உரிய முக்கிய பண்டங்கள். கும்பகோணத்தில் டிகிரி காபியை கொஞ்சம் தேடத்தான் வேண்டும், மங்களாம்பிகை, முருகன் கபே ஆகிய இரண்டை மட்டும் பரிந்துரைக்கிறேன். இருப்பினும் கும்பகோணத்தில் கிடைக்கும் தவளை வடையும்  கல்யாணமுருங்கை பூரியையும்  தரிசிக்காமல் பயணத்தை முடிக்க வேண்டாம். மயிலாடுதுறையில்  சைவ உணவுகளுக்கு நீங்கள் மயுரா  மற்றும் காளியாகுடி என்கிற இரண்டு ஹோட்டல்களை நாடலாம்.  




தாராசுரத்திற்கு சென்று அங்கே யாரிடமாவது கலா அக்கா இட்லிக் கடை என்றால் உடனே அழைத்துச் செல்வார்கள். கடந்த 25 ஆண்டுகளாக கலா அக்கா இங்கே இந்தக் கடையை நடத்தி வருகிறார், 25 காசுகளுக்கு ஒரு இட்லி என தொடங்கிய இந்தக் கடையில் இன்று இட்லியின் விலை ஒரு ரூபாய். காரைக்காலில் 1918 முதல் இயங்கும் முத்துப்பிள்ளை பேக்கரி இந்த ஊரின் அடையாளங்களில் ஒன்று. 1937ல் இருந்து இயங்கும் காரைக்கால் நாகூர் அல்வா கடையில் குலாப் ஜாமுன், பருத்தி அல்வா அத்தனை சுவை. காரைக்காலுக்கும் குலாப் ஜாமுனுக்கு இருக்கும் தொடர்பை யாராவது ஆய்வு செய்ய வேண்டும். காரைக்கால் மாம்பழ திருவிழா நேரம் நீங்கள் சென்றால் ஒரு இனிப்பான அனுபவம் உங்களுக்காக காத்திருக்கும். பழையாறு துறைமுகத்தில் இருந்து வரும் இறால் கமகமவென மணக்கும், அதைச் சாப்பிடாமல் கடக்க இயலாது, காரைக்கால் அம்மையார் பாடு படு திண்டாட்டம் தான். நாகூர் தர்கா அலங்கார வாசல் அருகில் கிடைக்கும் இறால் வாடாவுடன்  நாகூர் விஜயத்தை தொடங்கி விட்டீர்கள் எனில் அது ஒரு சிறப்பான தொடக்கம். பீஃப் பக்கோடா, சிக்கன் பக்கோடா, சிங்கப்பூர் ரோஸ் மில்க், அஜ்மீர் பர்ஃபி, பருத்தி ஹல்வா என இங்கே கலர் கலராக உணவுகள் நம்மை வரவேற்கும்.




நாகூர் தெற்குத் தெருவில் ஒரு அம்மா சுட்டு விற்கும் பரோட்டா உருண்டை, அதை கொஞ்சம் க்ரேவியுடன் ஊற்றி சாப்பிட வேண்டும். பரோட்டாவின் மிகவும் மாறுபட்ட பிறவி இது, இந்த பிறவியை நாம் தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது. அஞ்சு கறி எனும் அசைவச் சாப்பாட்டை இங்கு ஒரே தட்டில் (தாம்பாளம்) பரிமாறுவார்கள்.  அதில்  ஈரல் கலியா, மட்டன் வெள்ள குருமா, மட்டன் மசாலா கறி, தேங்காய் பால் ஊற்றிய தால்சா என்று இந்த தட்டில் உள்ளவைகளை நான்கு-ஐந்து பேர் சாப்பிடலாம். இஸ்லாமிய முறைப்படி, ஒரே தட்டில் தான் அனைவரும் பங்கிட்டு சாப்பிட வேண்டும், இது ஒரு அருமையான ருசிகர கூட்டுணவு அனுபவம். நாகூரில் இருந்து நாகப்பட்டினம் வந்தேன். மதுரையின் நாகப்பட்டினம் அல்வா கடை ஒரு காலத்தில் பிரபலம் என்பதை வைத்து நாகப்பட்டினத்தில் அல்வா அதே அல்வா கடை இருக்குமோ என்று தேடினேன், அப்படி ஒரு கடை அங்கு இல்லை என்றார்கள். 


Kola Pasi Series-2 | மதுரை என்றாலே ருசியின் முகவரி; உணவின் தலைநகரம்...!


அந்த கடை இல்லை ஆனால் ஜெ.மு சாமி அல்வா கடை தான் இங்கே பேமஸ் என்றார்கள். பழைய கடை, சிறிய கடை என்றாலும் ருசி பிரமாதமாக இருந்தது. நாகப்பட்டினத்தில் அரேபிய பாணியிலான உணவகங்கள் இருக்கிறது, நீங்கள் தரையில் அமர்ந்து பல விதமான மந்திகளை, அல்-ஃபகம்-களை சாப்பிடலாம்.  திருவாரூருக்குள் நுழைந்ததும் அங்கு என் கல்லூரி நண்பர் கபீர் காத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை மனோன்மணி மிலிட்டரி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். 1955ல் தொடங்கி மூன்றாம் தலைமுறையாக நடத்தப்படும் உணவு விடுதி அது. வாழை இலை விரித்தார்கள்,  அதில் ஒரு கூட்டு, ஊறுகாய். சுடச்சுட ஆவி பறக்க சோறு போட்டார்கள். அடுத்து ஒருவர் வந்தார், அவர் கையில் ஒரு பாத்திரத்தில் இருந்து மணக்க மணக்க மீனும் குழம்பும். அதன் பிறகு ஒரு மங்கு தட்டில் மீன் வறுவல் வந்தது. சுட சுட இருந்த மீன் வறுவலை சாப்பிட்டேன், பரிமாறுபவர் தன் வீட்டுக்கு வந்த விருந்தினரை போல் அனைவரையும் உபசரிக்கும் குணம் எல்லாம் சேர்ந்து என் கண்களில் நீர் கசியச் செய்தது. நான் சாப்பிட சாப்பிட மீன் வறுவலை, குழம்பு மீனை வைத்தபடி இருந்தார். எப்படியும் ஒரு ஐந்து துண்டு மீன் வறுவலை சாப்பிட்டேன், அவர் நான் சாப்பிட்டு முடிக்கும் போது எல்லாம் உடனடியாக வைத்தது எனக்கு ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியதால் என் சாப்பிடும் வேகத்தை குறைத்துவிட்டேன்.



 


இப்பொழுது தான் என் நண்பர் கபீர் கூறினார், மீன் வறுவலை வைத்த அண்ணன் தான் கடையின் முதலாளி, அவர் எங்க வங்கியில் அக்கவுண்ட் ஹோல்டர் என்றார். கை கழுவி விட்டு வந்தேன் அவரது கைகளை பற்றிக் கொண்டேன். இப்படி ஒரு உணவு கிடைக்கும் என்றால் நான் சமையற் கட்டே இல்லாத வீட்டை தான் கட்டுவேன் என்றேன். அவர் முகத்தில் அலை அலையாய் ஓடிய சிரிப்பை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவர் பெற்ற தொகை மிகவும் குறைவு, இந்த தொகையில் இத்தனை ருசியான உணவுகளா என்பதை என்னால் நம்ப முடியவில்லை.  கடை முதலாளி அண்ணன் என்னிடம், “நீங்க நீயா நானாவில் எல்லாம் புத்தூர் ஜெயராமன் கடை, குற்றாலம் பார்டர் கடை பத்தி எல்லாம் பேசினீங்க ஆனா நம்ம கடையை விட்டுட்டீங்க என்றார்”. நான் இன்று தான் முதல் முதலாக திருவாரூர் வந்திருப்பதாக தெரிவித்தேன். ஒரு அற்புதமான உணவை கொடுத்து இது போதும் எங்களுக்கு என்று இருபக்கமும் மன நிறைவுடன் ஒரு வியாபாரம் நடைபெறுவது இந்த கால கட்டத்தில் அபூர்வமே. நிச்சயம் அடுத்து கிடைக்கும் வாய்ப்பில் உங்களின் சேவையைப் பற்றி கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசுகிறேன் என்றேன்.


Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா


நீங்கள் செய்வது வியாபாரம் அல்ல சேவை என்று கூறிவிட்டு திருவாரூரில் இருந்து புறப்பட்டேன். ஆனால் மனதில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது இன்று அசைவ உணவகம் என்கிற பெயரில் இயங்கும் பெரிய மாஃபியாக்கள் கடைக்கு வருபவர்களிடம் ஜேப்படி, பிக்பாக்கெட் போல் பணத்தை வசூல் செய்கிறார்கள், இவர்கள் மத்தியில் ஒரு புத்தூர் ஜெயராமன் கடை, ஒரு திருவாரூர் மனோன்மணி எல்லாம் நம் காலத்தின் குறிஞ்சி பூக்கள் தானே.  நான்  கிளம்பும் போது  இன்று காலை சிதம்பரத்தில் இருந்து கிளம்பி வந்த இந்த பாதை எனக்கு வந்தியத்தேவன் இலங்கைக்கு இந்த வழியாகவே சென்றிருப்பார் என்பதை நினைவு படுத்தியது.  அவர் வீராணம் ஏரிக்கரையில் இருந்து கோடியக்கரை சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றார். அவர் பயணித்த போது என்னவெல்லாம் கிடைத்தது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் அதை எழுதிய கல்கி இதில் பாதி உணவுகளை சுவைத்திருப்பார்.