Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா

நாம் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தமிழர்களின் உணவு உலகத்திற்குள் ஒரு உலா செல்லவிருக்கிறோம். பசியோடு காத்திருக்கும் உங்களுக்கு ஒவ்வொரு வாரமும் பல்வேறு ருசியான அறுசுவை உணவுகள் காத்திருக்கும்

Continues below advertisement

உணவு என்பது உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கான ஒரு அடிப்படை ஆதாரமாகும். முதலில் மனிதன் தனது உணவை வேட்டையாடியே அடைந்திருக்கிறான், வேட்டையில் வெற்றி கிடைத்ததும் அந்த மிருகத்தின் இறைச்சியை வேட்டையாடிய குழுவினருடன் பகிர்ந்து உண்டிருக்கிறான்.  உணவிற்கான வேட்டை அல்லது காடுகளில் உணவு சேகரித்தல் தான் அவனது முக்கிய பணிகள். வேட்டையில் கிடைத்த மிருகத்தை தீயிலிட்டு சுட்டு சாப்பிட அவன் அறிந்து கொண்ட கணம் உணவே பெரும் கொண்டாட்டமாக மாறியது. மிருகத்தை தீயிலிட்டு அதை சுற்றி ஆடிப்பாடியிருக்கிறான். காடுகளில் பலவித உணவுகளை சேகரித்தலும் அது சார்ந்த அவனது கூர்ந்த கவனித்தலும் அவனை மெல்ல மெல்ல விவசாயம் நோக்கி இட்டுச் சென்றது. தன்னை சுற்றிலும் நடக்கும் இயற்கையின் சுழற்சியை, நடைமுறையை கவனித்ததில் விவசாயம் பிறந்தது. ஊட்டச்சத்துகளை தேடும் மனிதனின் பயணம் இன்றும் புதிய புதிய வடிவங்களை நோக்கி நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

Continues below advertisement


Kola Pasi Series-2 | மதுரை என்றாலே ருசியின் முகவரி; உணவின் தலைநகரம்...!

சுவைகள் மனிதனின் நாக்கில் வந்து அமர்ந்தது முதலே அது அவனை பாடாய் படுத்தி இன்னும் அவனது பயணத்தை சுவாரஸ்யமாக்கி விட்டது. 'சமைத்தல் ' என்றால் பக்குவப்படுத்துதல் என்று பொருள். உணவை  மனிதன் சமைக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால் இன்றைய மனித மூளை இப்படியான வளர்ச்சியடைந்த நிலையை அடைந்திருக்காது. தாவரங்கள், விலங்குகள் என அவைகளை பக்குவப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் அவைகளை உற்பத்தி செய்தல் தான் இன்றும் இந்த உலகின் மிகப்பெரும் தொழில்களாக திகழ்கின்றன. உலகம் முழுவதும் மனிதன் அந்த அந்த பகுதியில் கிடைத்த இயற்கை விளைபொருட்களின், இறைச்சிகளின் அடிப்படையில்  தன் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டான். தமிழர்கள் எத்தகைய உணவுப் பழக்கத்தை கொண்டிருந்தனர், சங்க இலக்கியங்கள் உணவு குறித்து பேசியிருக்கிறதா என்பதான கேள்விகளுடன் வாசிக்கத் தொடங்கிய என்னை, இந்த தொடர் நோக்கி என் வாசிப்பு அழைத்து வந்துள்ளது. சங்க காலத் தமிழர்களுடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாய் இருந்தது என்பதை அறிகிறோம். சங்க கால இலக்கியங்களே தமிழர் உணவு குறித்த மிக விரிவான ஆவணமாக நமக்கு பெரும் பொக்கிஷமாக விளங்குகிறது. 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என  மாறுபட்ட வாழ்களங்களில் வெவ்வேறு முறையான உணவுகள் இருந்ததை சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது.  பெரும்பாணாற்றுப்படைப் பாணன் வந்த விருந்தினர்களுக்கு எல்லாம் கருப்பஞ்சாற்றைத் (கரும்புச்சாறு) தந்திருக்கிறான். பெரியாழ்வார் தம் பாடல்களில் பெரும் உணவுப் பட்டியல்களை தருகிறார். தனியாக உண்ணும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை என்பதை  திணைப்பாடல்கள் பல நமக்கு கூறுகின்றன.  

Kola Pasi Series-3: பல்லவர் நாட்டில் ஒரு கடலோரப் பயணம் -  பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் வரை ஒரு உணவு உலா

சாமை, திணை, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், கம்பு, அரிசி என்று தானியங்கள் அனைத்தையும் சங்க காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழர்களின் உணவு பலதரப்பட்டது. அதில் தானியங்கள் தொடங்கி பல்வேறு பயறுகள்,  காய்கறிகள், இறைச்சிகள், கடலுணவுகள் என காலத்தால் செழுமைப்படுத்தப்பட்டும் வருகிறது. அம்மி, குழவி, உரல், உறி, ஆட்டுக்கல், திருகைக்கல், மண் அடுப்பு, உலக்கை, மத்து, அரிவாள்மனை, முறம், சுளகு, அகப்பை போன்ற சமையல் அறைக் கருவிகளையும் நமக்கு சங்க இலக்கியங்கள் பட்டியலிட்டு தருகிறது. அருந்துதல்,  உண்ணல், உறிஞ்சுதல்,  குடித்தல்,  தின்றல், துய்த்தல் என உணவு உண்ணும் முறைகளைக் கூட தமிழர்கள் வகை பிரித்து வைத்துள்ளனர்.

உணவினை நீரிட்டு அவித்தல், வறுத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற பல்வேறு உணவு முறைகளையும் சங்க இலக்கியங்கள் நமக்கு முழுமையாக அறிமுகம் செய்கிறது. உலக இலக்கியங்களிலேயே உணவு குறித்தும் சமையல் குறித்தும் இத்தனை விரிவான குறிப்புகள் வேறு எந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு இயற்கையான உணவே முறையில் உணவே மருந்தாகவும் இருந்துள்ளது. சுக்கு, மிளகு, ஜாதிக்காய், பெருங்காயம், வெந்தயம், சீரகம், ஓமம், மஞ்சள் என நீளும் நம் பலசரக்கு பட்டியலும் அதன் பயன்பாடும் ருசிக்கும் அதே வேளையில் நோய்கள் தீண்டாமல் நலவாழ்விற்கும் உத்திரவாதம் அளித்துள்ளது.


இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு,  பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம், விருந்தும் மருந்தும் மூன்று நாள், ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ, உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும், நொறுங்கத் தின்றால் நூறு வயது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், பசி வந்திடப் பத்தும் பறந்து போகும், விளையும் பயிர் முளையிலே தெரியும், உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி என்று இன்றும் தமிழகம் முழுவதும் புழங்கும் இந்த பழமொழிகள் உணவுக்கும் வாழ்விற்குமான நெருக்கத்தையே உணர்த்துகின்றன.

Kola Pasi Series-4 | புத்தூர் ஜெயராமன் கடை முதல்  திருவாரூர் மனோன்மணி வரை - பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுடன் ஒரு பயணம் 

இடம் பெயர்வும், நகரமயமும் நம் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நம் சமையற்கட்டில் இருந்து பல கருவிகளை அப்புறப்படுத்தியும் புதிய கருவிகளை உட்புகவும் செய்துள்ளது. அதே போல பல பழைய உணவுகளை நாம் மறந்தும் புதிய உணவுகள் நோக்கியும் விரைந்து சென்றிருக்கிறோம். இந்த பின்னனியில்  மனிதனின் பசி நம் தமிழ் நிலத்தில் எவ்வாறு இருந்திருக்கிறது, தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களின் உணவு எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது, இன்று மக்கள் விரும்பி உண்ணும் உணவுகள் யாவை என்கிற தேடலுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு வாரமும் நாம் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தமிழர்களின் உணவு உலகத்திற்குள் ஒரு உலா செல்லவிருக்கிறோம். பசியோடு காத்திருக்கும் உங்களுக்கு ஒவ்வொரு வாரமும் பல்வேறு ருசியான அறுசுவை உணவுகள் காத்திருக்கும்

Continues below advertisement
Sponsored Links by Taboola