72 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு அரசியலமைப்பு நிர்ணய சபையால்(Constituent Assembly) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த 72-வது ஆண்டில் நமது அரசியல் அமைப்புச் சட்டம் ஏறக்குறைய 103 முறைக்கு மேல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 


இந்தியாவிற்கு முதன்முதலில் அரசியலமைப்புச்  சட்டம் அமைக்க ஒரு சபையை உருவாக்க வேண்டும் என்று 1934ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.ராய் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவும் சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியர்களால் அமைக்கப்பட வேண்டும் என்றார். இந்தியர்களின் இந்தக் கோரிக்கையை ஆங்கிலேயே அரசு 1940ஆம் ஆண்டு அளித்த 'ஆகஸ்ட் ஆஃபர் ' என்னும் உடன்படிக்கையில் ஒப்புக் கொண்டது.





1942ஆம் ஆண்டு பிரிட்டேன் கேபினட் உறுப்பினர் ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ் (Cripps Proposals) இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கான பிரிட்டன் அரசின் பரிந்துரையுடன் இந்தியா வந்தார். இந்தப் பரிந்துரைகளை வைத்து இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


இதன் பின்னர் 1946ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து 'கேபினட் மிஷன்'(Cabinet Mission) என்ற குழு தங்களது பரிந்துரைகளுடன் இந்தியா வந்தது. அதில் இந்தியர்கள் நிறைந்த அரசியலமைப்புப் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு அந்தச் சபை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியர்கள் ஒப்புதல் அளித்தனர். 


அதன்படி 1946ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அப்போது மொத்தம் 389 உறுப்பினர்கள் இந்தச் சபையில் இருந்தனர். இந்தச் சபையின் முதல் கூட்டம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது.  எனினும் இந்தக் கூட்டத்தை முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் புறக்கனித்தனர். ஆகவே 211 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். 




1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி 'Objectives Resolution’ என்ற தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு கொண்டு வந்தார். இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிய வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் அடிப்படை கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்தத் தீர்மானம் 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் தனி நாடாக உருவெடுத்ததால், அரசியலமைப்பு நிர்ணய சபையின்  உறுப்பினர்கள் எண்ணிக்கை 299-ஆக குறைந்தது. 


அரசியலமைப்பு நிர்ணய சபையில் 8 முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மிகவும் முக்கியமான குழு தான் அரசியலமைப்புச் சட்ட வடிவத்தை இயற்றும் குழு (Drafting Committee). இந்தக் குழுவிற்கு டாக்டர். அம்பேத்கர் தலைவராக இருந்தார். இந்தக் குழு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அமைக்கப்பட்டது. 


இந்தக் குழு அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வடிவத்தை 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்பின்பு மக்கள் கருத்து மற்றும் இதர உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு அதே ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வரைவு தயாரிக்கப்பட்டது. 




இறுதியில் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 395 பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள் இருந்தன. 


இவ்வளவு பெரிய வடிவிலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்து  மேற்கத்திய வல்லுநர்கள் சிலர் விமர்சனம் செய்தனர். குறிப்பாக சர் ஐவர் ஜென்னிங்ஸ், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் பெரியது, நடைமுறை படுத்த மிகவும் கடினமானது” எனத் தெரிவித்தார். அதேபோல பலர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறுகிய காலம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று கருத்து தெரிவித்தனர். 




ஆனால் அவர்களின் வார்த்தைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இன்று தனது 72-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  இந்த நாளின் நமது அரசியலமைப்புச் சட்டத்தை நாம் மிகவும் வியர்ந்து போற்ற வேண்டும். அத்துடன் இத்தகைய  பொக்கிஷத்தை உருவாக்கிய நமது தலைவர்களை நாம் போற்ற வேண்டும்.