மதுரை என்றாலே அது வரலாற்று நகரம், நெடுங்காலமாக மக்கள் தொடர்ச்சியாக வசித்த உலகின் மிகச்சில நகரங்களில் ஒன்று. இந்த நகரத்திற்கு வியாபாரிகள், ஒற்றர்கள், மாலுமிகள், பயணிகள், மன்னர்கள், தளபதிகள், படை வீரர்கள், கலைஞர்கள் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  மக்கள் வந்தவண்ணம் இருந்தார்கள், இருக்கிறார்கள். அலை அலையாய் வந்தவர்கள் அனைவரும் தங்களுடன் புதிய புதிய ருசிகளை, பலசரக்குகளை, செய்முறைகளை கொண்டு வந்து மதுரை மக்களின் நாவுகளில் ஒட்ட வைத்தார்கள். இந்த ருசி தான் இன்றளவும் மதுரையின் தெருக்கள் எங்கும் மணந்து கமகமத்து கிடக்கிறது. மதுரையில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வீதியில் நீங்கள் ஒரு உலா சென்றால் மதுரை மண்ணின் மனமுடன்  சுடச்சுட பருத்திப்பால்

   நம்மை வரவேற்கும். ரயிலடியில் பணியாரம் தயாராகும், திரும்பிய பக்கமெல்லாம் டீ-காபி நுரை பொங்கியபடி நம்மை பார்த்து சிரிக்கும். சப்பானி கோவில் பகுதியில் முட்டை பாலும், கீழவாசலில் சுக்கு மல்லி காபியும் கமகமக்கும்.


மதுரை முழுவதும் காலை அடுப்பில் ஏற்றப்படும் வடைசட்டிகளின் எண்ணெயில் முதலில் அப்பம் மிதக்கும், அப்பத்திற்கு விடை கொடுத்த பிறகு உளுந்தவடை, ஆமைவடை, முட்டைகோஸ், கீரை வடை, போண்டா, வித விதமான பஜ்ஜிகள் என அந்த எண்ணெய் பொழுதெல்லாம் கொதித்தபடியே கிடக்கும். காலேஜ் ஹவுஸ், மாடர்ன் ரெஸ்டாரண்ட், கண்ணா போர்டிங் எனத் தொடங்கிய மதுரை சைவ சாப்பாட்டுக் கடைகள்  அசோக் பவன், ஆரியபவன், மீனாட்சி பவன் என உருமாறி இன்று கெளரி கங்கா, சபரீஸ், கெளரி கிருஷ்ணா, முருகன் இட்லி கடை என இன்னும் விதவிதமாய் மதுரைக்கு வரும் விருந்தினர்களையும் உள்ளூர் வாசிகளையும் உபசரிக்கிறது. காலேஜ் ஹவுஸ் ஹோட்டலுக்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையுமே எனக்கு இது ஹோட்டலா அல்லது கல்யாண வீட்டு பந்தியா என்கிற குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும்.


Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா


இட்லி, தோசை வகைகள், பொங்கல், பூரி, ஆப்பம், பணியாரம் என இவை எல்லாம் பெரிய ஹோட்டல்கள் முதல் ரோட்டு கடைகள் வரை தயாராக இருக்கும். முனிச்சாலை பகுதியில் கமலம் பாட்டியின் கருப்பட்டி தோசை அல்லது லோனி ஆப்பமும் காத்திருக்கும். பகல் பொழுதில் கொஞ்சம் வெயில் உடலில் பட்டதுமே ஜிகர் தண்டா, கரும்புச்சாறு, இளநீர் சர்பத், நன்னாரி சர்பத், ரோஸ் மில்க், லெமன் சோடா, பவண்டோ என மக்கள் தஞ்சமடைவார்கள். அரசு அலுவலகங்களுக்கும் வியாபார நிமித்தமான வேலைக்கு மதுரைக்கு வருபவர்கள்  வந்து தங்களின் வேலைகள் மதியத்திற்குள் முடிந்து விட்டால், உடன் சூடான அதிரசம், போளியில் கைவைத்து மறுபுறம்  பஜ்ஜியை கையில் வைத்துக்  கொண்டு சட்டினி சாம்பாரில் மூழ்கி எழுந்தே தங்கள் ஊர்கள் நோக்கி செல்வார்கள்.




மதுரைக்கு ஜவுளி வாங்க வருபவர்கள்,  நகைக் கடைக்கு வருபவர்கள், கல்யாண சேலை முதல் சீர்வரிசை வாங்க வருபவர்கள் என்று நகரத்திற்கு சுற்றுப்பட்டில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தபடி இருப்பார்கள். இப்படி வாடிக்கையாக மதுரைக்கு வருபவர்களுக்கு எல்லா கடைகளையும் போலவே வாடிக்கையான சாப்பாட்டுக் கடைகளும் உண்டு. அம்ச வல்லி பவன், சரஸ்வதி மெஸ், சாரதா மெஸ்,  ஜெயவிலாஸ் சாப்பாட்டு க்ளப், அருளானந்தம் சாப்பாட்டு க்ளப், இந்தோ- சிலோன் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், அம்மா மெஸ், குமார் மெஸ்,  ஜானகிராமன் ஹோட்டல், செட்டிநாடு மெஸ், ஸ்ரீராம் மெஸ், கணேஷ் மெஸ், பனைமரத்து கடை என இந்த கடைகள் அனைத்திற்குமே பெரும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கால மாற்றத்தில் இந்த பட்டியலில் இன்று  பல ஹரீஸ் மெஸ், சத்யா மெஸ் என புதிய கடைகள் இணைந்து கொண்டன.


Kola Pasi Series-2 | மதுரை என்றாலே ருசியின் முகவரி; உணவின் தலைநகரம்...!


மதுரையில் மதிய சாப்பாட்டிற்கு மீன், கோழி, பீஃப்,  முயல், காடை, புறா, வகைகள் கிடைத்தாலும். மீன்களில் ஐயிரை மீன் குழம்பு தவிர்த்து மதுரை என்றாலே அது ஆட்டிறைச்சி தான்.  ஆட்டிறைச்சியின் தலைநகரம் மதுரை. மிளகு சுக்கா, எண்ணெய் சுக்கா, மட்டன் சுக்கா, ஈரல், சுவரொட்டி, குடல்  குழம்பு,  குடல் ரோஸ்ட், தலைக்கறி, எலும்பு ரோஸ்ட், காடி சாப்ஸ், சங்கு, சிலிப்பி,  நெஞ்சு எலும்பு, நுரையீரல், முட்டை கறி, கைமா கறி, , கண் முழி, சங்கு,  கோலா  உருண்டை என இந்த பட்டியலில் 48 ஐட்டங்கள் உங்களுக்காக மதுரையில் காத்திருக்கும்.




செளராஸ்டிரா உணவகங்களுக்கு என முனிச்சாலையில் அன்னப்பூரணி விலாஸ் முதல் மார்வாடிகளின் வருகைக்கு பின் ராஜஸ்தான் குஜராத் போஜனாலயங்கள் டவுன் ஹால் ரோடு எங்கும் செயல்பட்டு வருகின்றன. மாலை நேரம் ஹரி விலாஸ் மற்றும் கோபு ஐயங்கார் ஹோட்டல்களின் வெள்ளையப்பம், அடை அவியல் தொடங்கி உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய், அப்பளம் என பஜ்ஜிகள் அணிவகுத்து மதுரையின் வீதிகளில் உலா வரும். மதுரையெங்கும் பொழுது சாயவே உணவுகளின் கொண்டாட்டம் தொடங்கி விடும், சங்க காலம் தொட்டே இந்த நகரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருள் நகரத்தை கட்டியணைக்க உணவுகளின் திருவிழாக்கள் தொடங்கும். மாலையில் தள்ளுவண்டி கடைகளில் கிழங்கு, கடலை, மக்காசோளம், பயிறு வகைகள், வடைகள், ஃபைரி, ரவா போளி, பழங்கள், பானி பூரி, மஷ்ரூம்/காளி ஃபளவர், சாட் வகைகள் முதல் பர்மா முட்டை மசால், அத்தோ, பேஜோ, மெய்ங்கோ உணவுகள் தயாராகும்.  சைவ பிரியர்களுக்கு அரிசி, கேப்பை, கோதுமை, ராகி புட்டு, பனியாரம் என தனியான வகைகளும் ஐயப்பன் தோசைக் கடையின் வகை வகையான தோசைகளும் வரவேற்கும்.


Kola Pasi Series-3: பல்லவர் நாட்டில் ஒரு கடலோரப் பயணம் -  பாண்டிச்சேரி முதல் சிதம்பரம் வரை ஒரு உணவு உலா


மன்னர் காலத்தில் முரசு அறிவித்தது போல் இன்றைய மதுரையில்  கொத்து பரோட்டாக்களின் கல்-இரும்பு இசை இரவின் கொண்டாட்டங்களை அறிவிக்கிறது. தல்லாகுளம் ஆறுமுகம் கடை, அசோக் ஈவினிங் மட்டன் ஸ்டால், பாலாஜி ஈவினிங் மட்டன் ஸ்டால், யானைக்கல் சுல்தான், ராஜேஸ்வரி ஈவினிங் மட்டன் ஸ்டால், மதுரை மாணிக்கம் ஹோட்டல், சார்லஸ்  கடை, கூரைக்கடை, நியூ மாஸ், பவர் கடை, முதலியார் இட்லி கடை, அமீர் மஹால் என மதுரையின் திசை எங்கும் பரோட்டாக் கடைகள் தான்.  இந்தக் கடைகள் என்றாவது விடுமுறையாக அடைத்திருந்தால் அந்த கடையில் வாடிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் குத்தி துக்கம் அனுசரிப்பார்கள்,  அன்றைய இரவு உணவு சாப்பிடாமல் தங்களின் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.




பரோட்டா, கொத்து பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை பாயா, வாழை இலை பரோட்டா, பன் பரோட்டா, ரத்தப் பொரியல், நல்லி, பாயா, சுவரொட்டி, ஈரல், குடல், கலக்கி, முட்டை பனியாரம்,  வெங்காய கறி தோசை என இந்த பட்டியலையும் யாரும் தொகுத்து விட இயலாது. ஒரு இரவு நேரக்கடையாக மதுரை மாவட்ட நூலகம் எதிரில் தமிழ் சங்கம் ரோடு ஒர்க்‌ஷாப் ரோடு முனையில் தொடங்கப்பட்ட கோனார் மெஸ் அறிமுகப்படுத்திய கறி தோசை இன்று மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது. மதுரை நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு பரோட்டா கடையிலும் புதிய புதிய சேர்மானங்களுடன் தனித்துவமான சால்னாக்கள் கிடைக்கும். அசல் பஞ்சாபி உணவுகளுக்கு என இரு கடைகள் மதுரையில் செயல்பட்டு வருகிறது. சைவ பிரியர்களுக்கு டவுன் ஹால் ரோட்டில் உள்ள பஞ்சாபி தாபாவும் சைவ அசைவ உணவுகளுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள பஞ்சாபி தாபாவும் நாவூறும் உணவுகளை தயாரித்து மகிழ்கின்றன.


இரவில்  ஆப்பம்ஸ் அண்ட் ஹாப்பர்ஸ் யாழ்ப்பான தமிழில் வரவேற்று ஈழத்து உணவுகளான ஆப்பம், பொல் சம்பல், சீனிச் சம்பல், தேங்காய் சொதி, சிலோன் ரொட்டி, வாழைப்பழ இனிப்பு ரொட்டி வகைகளுடன் காத்திருக்கும். மதுரையில் கருக்கலில் சாலையோரங்களில் கடைகளை எடுத்து வைத்து இட்லி சுடும் மதுரையின் அன்னப்பூரணிகளாக திகழும் அக்கா கடைகளை பற்றிச் சொல்லாமல் மதுரை உணவுகளை முடிக்க இயலாது. மதுரையெங்கும் ஆவிபறக்க இட்லி, தோசை, முட்டை தோசை என அரையிருளில் தொடங்கி நள்ளிரவும் மதுரையை தூங்காநகரமாக வைத்திருக்கும் இவர்களை சட்டம் ஒழுங்கின் பெயரில் மெல்ல மெல்ல 11 மணிக்கு எல்லாம் கடையடைக்க சொல்கிறது காவல்துறை.  இரவு நேர வாழ்க்கைக்கு இந்திய நிலப்பரப்பிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த ஒரு நகரம் இப்படி உறங்கச் செல்வது வருத்தமான ஒரு விசயமே.




ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு மதுரையில் ஒரு உணவு விடுதியின் பெயரில் CAFE இருந்தால் அது சைவ உணவு உணவகம்,  உணவு விடுதியில் பெயரில் CLUB  இருந்தால் அது அசைவ உணவகம். மதுரையில் கிராமப்புறங்களின் முக்கு ரோடுகள் எங்கும்  CLUB கடைகள் தான் தொடங்கப்பட்டன. எங்கள் ஊரில் இன்றைக்கு ஹோட்டல் என்ற சொல் நுழையவில்லை அது  “களப்பு கடை” யாகவே இன்றும் உள்ளது. மதுரைக்காரர்களுக்கு அப்பம், வடையில் தொடங்கும் நாள் ஜிகர்தண்டா, ஹல்வா வழியே கொத்து பரோட்டாவின் மீது ஏறி சால்னாவில் நீந்தி எங்கள் நாள் தென்னங் குருத்து, பட்டர் பன்னில் முடிவடைகிறது. மதுரையின் வரலாற்றில் இருந்த மீன் கொடி இப்பொழுது நத்தம்  காவண்ணண் பரோட்டா கடையின் இலை கொடியாக உருமாறியிருக்கிறது. வரலாற்று காலம் தொட்டே சுவாரஸ்யமாக ஒரு நினைவில் தங்கும் அனுபவமாக மாற்றியிருக்கிறது. இத்தனை சுவையான உணவுகள் இல்லையெனில் இத்தனை பெரும் இலக்கியங்கள் இந்த ஊரில் இருந்து உருவாகியிருக்காது.


Kola Pasi Series-4 | புத்தூர் ஜெயராமன் கடை முதல்  திருவாரூர் மனோன்மணி வரை - பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுடன் ஒரு பயணம்