உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. பாபு பவன் எனப்படும் அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் கணினி ஆபரேட்டராக ஒப்பந்த முறையில் பணியாற்றுபவர் 30 வயதான பெண். இவர் பணியாற்றும் பிரிவின் அதிகாரியாக இச்சாராம் யாதவ் என்பவர் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில், இச்சாராம் யாதவ் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதுடன், அதற்கு அந்த பெண் ஒத்துழைக்காத காரணத்தால் அவரை தாக்கவும் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஆதாரத்துடன் அந்த பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த அக்டோபர் 29-ந் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால், இச்சாராம் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்த காவல்துறையினர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இச்சாராம் யாதவ் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், இச்சாராம்யாதவ் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை தள்ளிவிட்டு தன்னை பாதுகாக்க முயற்சிக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த இச்சாராம் யாதவன் அந்த பெண்ணை தாக்குகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஒரு அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு இவ்வாறு பாலியல் தொல்லை அளித்த அரசு அதிகாரிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் சமூகவலைதளங்களில் குரல் கொடுத்தனர். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச காவல்துறையினர் இச்சாராம்யாதவை நேற்று கைது செய்தனர்.
அவரை கைது செய்து சிறையில் அடைத்த புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பிரியங்கா காந்தியின் கேள்விக்கு லக்னோ காவல் ஆணையர் கைது செய்யப்பட்ட இச்சாராம் யாதவ் சிறையில் இருக்கும் புகைப்படத்த பதிவிட்டு பதிலளித்துள்ளார். ஆதாரத்துடன் குற்றம்சாட்டப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? என்று உத்தரபிரதேச போலீசாருக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இச்சாராம் யாதவ் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள குற்றச்சாட்டில், “சிறுபான்மை நல அமைச்சகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறேன். இச்சாராம் யாதவ் எங்கள் பிரிவின் பொறுப்பாளராக பதவிவகிக்கிறார். அவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் எனக்கு தொல்லை அளித்து வருகிறார். அவருடைய ஆசைகளுக்கு ஒத்துழைத்தால் என்னுடைய பணியை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார். அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்வதாக மிரட்டினார். மேலும், என்னை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார்.” இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில், அரசு அலுவலகத்திலே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்