எங்கேனும் ஊர் சுற்ற வேண்டும். எந்த கவலையும் இன்றி காடு, மலை என சுற்றி வர வேண்டும். அதனால் மனதும், உடலும் புத்துணர்வு பெறும். புது அனுபவம் கிடைக்கும். புதிய உத்வேகம் அளிக்கும். அதனால் தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த இலக்கும் இன்றி ஊர் சுற்ற மனம் கிளம்பி விடுகிறது. அந்த வகையில் நான் ஊர் சுற்ற தேர்வு செய்த இடம், தேக்கடி.
தேக்கடி பயணம்
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களுக்கும், மலை வாழிடங்களுக்கும் பல முறை சென்றாகி விட்டது. புதிதாக ஒரிடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். உடனே மனம் கேரளாவிற்குள் ஊர் சுற்றச் சென்று விட்டது. அதற்கு அங்கு மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை ஏழில் கேரளாவில் கொட்டிக் கிடப்பதே காரணம். அதிலும் இடுக்கி மாவட்டம் இயற்கையின் ஆட்சி நடக்கும் பகுதி. அதனால் தேக்கடி நோக்கி பயணமானோம்.
தேக்கடி கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இவ்வூர், தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளிக்கு அருகில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பசுமைமாறாக் காடுகளுக்காகவும் சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் தேக்கடி புகழ் பெற்றது. ஆப் ரோடு ஜீப் சவாரி, யானை சவாரி, படகு சவாரி என குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கும் உகந்த இடம்.
கோவையில் இருந்து தேனிக்கு கிளம்பும் போதே, அடை மழை வெளுத்து வாங்கியது. மழையால் பயணம் தடைபடுமோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், துணிந்து மழையோடு தேனிக்கு சென்று விட்டோம். அங்கு எதிர்பார்ப்பிற்கு மாறாக மழை ஓய்ந்திருந்தது. அதனால் நிம்மதியாக குமிளி நோக்கி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணித்தோம். ஆங்காங்கே மழைச் சாரல் நனைந்தபடி வளைந்து நெளிந்து குமுளி மலையேறினோம். தமிழ்நாடு எல்லை முடிந்து கேரளா மாநிலம் வரவேற்றது. மாலை நேரமும், மழை நேரமும் சேர்ந்து கொண்டதால் நேரடியாக விடுதிக்கு சென்று விட்டோம். எல்லைப் பகுதி என்பதால் மொழிச் சிக்கல் இல்லை. குறைந்த கட்டணத்தில் விடுதி அறைகள் கிடைக்கின்றன. குமுளி இரவு மழையில் நனைந்தது.
மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ - மேகங்கள் ஆட்சி செய்யும் மேகமலை பயணம்..!
'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!
ஆப் ரோடு ஜீப் சவாரி
கரடு முரடான வனப்பாதையில் இயற்கை ஏழிலை கண்டு இரசிக்க ஆப் ரோடு ஜீப் சவாரி இருக்கிறது. தங்கியிருந்த விடுதி நிர்வாகமே ஜீப் சவாரிக்கு ஏற்பாடு செய்து தரும். 4 மணி நேரம் ஜீப்பில் காடுகளுக்குள் பயணிக்கலாம். கட்டணத்திற்கு ஏற்ப பல வழித்தடங்களில் ஜீப் சவாரி இயக்கப்படுகிறது. இதமான குளுமையான சூழல் தவழ்ந்து கொண்டிருந்தது. ஜீப் மலைப்பாதையில் சீறிப் பாய்ந்தது. மலைகளை தழுவி நிற்கும் மேகங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள், பணப்பயிர்த் தோட்டங்கள் காட்சியளித்தது. அடை மழை காரணமாக பெரியாறு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
ஜீப் தடம் மாறியது. தார் சாலையில் இருந்து ஒற்றையடி மண் பாதைக்குள் நுழைந்தது. வனத்தடத்தில் வளைந்து நெளிந்து மேடுகளின் வழியாக நீண்டு கிடக்கும் சரிவுப்பாதையில் ஜீப் ஏறியிறங்கியது. கரடு முரடான பாதையில் ஜீப் திக்கித் திணறி மேடேறியது. அலுங்கிக் குலுங்கி ஊர்ந்த ஜீப்போடு சேர்ந்து, உடலும் குலுங்கியது. குழியும் மேடாக, சேறும் சகதியுமாக இருந்தது. வழித்தடத்தை தவிர்த்த மற்ற இடமெங்கும் புல் வெளிகளாக இருந்தன. வழித்தடத்திலும் நீண்டு கிடந்த புற்களை ஜீப் உரசிச் சென்றது. பாதை செல்ல செல்ல சிரமங்களும் கூடிக் கொண்டே சென்றது.
காடு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடந்தது. அடிவானம் வரை மலைகளும் புல்வெளிகளும்நீண்டிருந்தன. வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் மலைகளின் பின்னணியில் திரும்பும் இடமெல்லாம் எழிற்காட்சிகளாக விரிந்தன. மழையில் காடு பச்சை புத்தாடை உடுத்தியிருந்தது. சத்திரம் என்ற இடத்தில் ஜீப் நின்றது. இதுவரை அனுபவத்த சிரமங்களுக்கு மருந்து போடும் வகையில் அவ்விடம் இருந்தது. பனி பொழியும் காலைப் பொழுது, கருமேகங்கள் சூழ்ந்த வானம், நீண்டு கிடக்கும் மலைக் குன்றுகள். வானம் கீழ் இறங்கி வந்ததை போல மலைகளை மறைத்து ஓடும் வெண்ணிற மேகங்கள். பச்சை பசெலேன விரிந்து கிடக்கும் புல்வெளிகள் என மனதை கொள்ளை கொள்ளும் அற்புத காட்சியாக இருந்தது. சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கி இருந்து செல்லும் இடம் என்பதால், அவ்விடம் சத்திரம் என பெயர் பெற்றதாம். யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி காண கிடைக்குமாம்.
மீண்டும் ஜீப் பயணம் துவங்கியது. ஜீப்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கொண்டிருந்தனர். கியரை மாற்றி மாற்றி ஸ்டேரிங்கை சுற்றிச் சுற்றி ஜீப்பினை டிரைவர் ஓட்டினார். வழக்கம் போல மோசமான பாதையில் அலுங்கிக் குலுங்கிச் சென்றாலும், திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை அழகில் மனம் சொக்கிப் போனது. அடுத்தாக மவுண்டன் என்ற இடத்திற்கு சென்றோம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிற மலைகளை, வெண்ணிற மேகங்கள் தழுவிக் கொண்டு இருந்தன. அழகான இயற்கை சூழலில் சுற்றிச் சுற்றி போட்டோக்களை எடுத்து விட்டு கிளம்பினோம். அவ்விடத்தில் சிறிய ரக விமானங்களை கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திரும்பிச் செல்லும் போது தார் சாலையில் ஜீப் சென்றதால், எந்த சிரமமும் இருக்கவில்லை.
மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!
தேக்கடி படகு சவாரி
தேக்கடி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது படகு சவாரி தான். பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்க முடியும். படகு சவாரி செல்லும் பாதையில் யானை சவாரியும் இருக்கிறது. கும்கி யானைகள் மீது அமர்ந்து உலா வரலாம்.
படகு சவாரி செல்ல நமது வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. வனத்துறை வாகனங்களில் மட்டும் தான் செல்ல முடியும். நபர் ஒருவருக்கு 40 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் செல்கின்றனர். படகு சவாரிக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். நபர் ஒருவருக்கு 255 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் படகுகள் இயக்கப்படுகின்றன. நமது நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். பெரியார், வன ஜோட்சனா, ஜலயத்ரா, ஜல ஜோதி என படகுகள் உள்ளன. ஏரியில் படகு மெதுவாக நகரத் துவங்கியது. மலைகளுக்குள் தேங்கியிருந்த தண்ணீரில் மெல்ல ஊர்ந்தது. நீல வானமும், பஞ்சு பறப்பது போன்ற வெண்ணிற மேகக்கூட்டங்களும், பசுமை போர்த்தியபடி நீண்டு கிடக்கும் மலைத் தொடர்களும், பல்லுயிர்கள் புகலிடமான வனப் பகுதிகளும் அழகாக காட்சியளித்தன. பல விதமான பறவைகள் காட்சி தந்தன. ஏரிக்கு நடுவே பட்டுப் போன மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டியிருந்தன.
இயற்கையின் அழகை இரசிப்பது மட்டுமின்றி வன விலங்குகளையும் பார்க்க முடியும். நாங்கள் சென்ற போது வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு மாடு தண்ணீர் குடித்து சென்றது. மான்கள் கூட்டம் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள் கூட்டமாக நீர் குடிக்க வருவதை பார்க்க முடியுமாம். ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் கரை திரும்பினோம். ஏரிக்கு நடுவே தங்குமிட வசதிகளும் உண்டு.
உடனடியாக ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், படகு சவாரியோடு அங்கிருந்து கிளம்பினோம். மழைக்கால மேகங்கள் சூழ்ந்து அடை மழை பொழிந்தது.
(பயணங்கள் முடிவதில்லை)
’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்
’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ Part-5 : அசர வைத்த அதிரப்பள்ளியும்.... ஆச்சரியப்பட வைத்த சாலக்குடியும்!