மேகமலைக்கு செல்ல வேண்டுமென்ற ஆசை வருவதற்கு, அதன் பெயரே எனக்கு போதுமானதாக இருந்தது. அது பெயருக்கு ஏற்ப மேகங்களும், மலைகளும் நிறைந்த இடம். ஆம், மேகங்கள் ஆட்சி செய்யும் இடம் மேகமலை, அதிகம் அறியப்படாத மலை வாழிடம். இயற்கையை இரசிக்க விரும்புபவர்கள், ஊர்ச் சுற்ற விரும்புவர்கள் விரும்பிச் செல்லும் இடம். ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலை வாழிடங்களுக்கு பதிலாக புதிதாக ஒரிடத்திற்கு செல்ல விரும்புபவர்களுக்கு உகந்த அழகிய இடம், மேகமலை.
மேகமலை பயணம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சிறந்த நில அமைப்பை கொண்ட இடம். திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, நீல வானில் வெண் மேகங்கள் நம்மை வரவேற்கும். தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைப்பாதை துவங்கும். அங்குள்ள வனத்துறை சோதனை சாவடியில் விபரங்களை அளித்து விட்டு செல்ல வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும் மாலை 4 மணிக்குள் சோதனைச் சாவடியை கடக்க வேண்டும் என வனத்துறையினர் கண்டிப்புடன் அறிவுறுத்துகின்றனர்.
மலைப்பாதை வளைந்து நெளிந்து மலையேறும். புதிதாக போடப்பட்ட தார் சாலையில் எந்த சிரமமும் இன்றி மலையேறலாம். தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்த போது, குறுகிய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் வாகனங்கள் செல்ல சிரமத்திற்கு உள்ளாகி வந்தன. அச்சாலைகள் அரசிடம் ஒப்படைத்த பின்னர் தான், புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. 2017 ம் ஆண்டிற்கு பின்னர் போடப்பட்ட தார் சாலைகளால், மேகமலைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
தமிழ் வாசம் வீசும் கொண்டை ஊசி வளைவுகள்
மலைப்பாதையில் ஆங்காங்கே குட்டுக்குட்டாக கிடந்த யானைச்சாணங்கள் அச்சத்தை தந்தன. பகல் நேரம் என்பதால், எந்த வன விலங்கும் குறுக்கிடவில்லை. அப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அக்கொண்டை ஊசி வளைவுகளுக்கு அழகான பண்டைய தமிழ் பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டு, பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வேங்கைப் பூ, மகிழம் பூ. இருவாட்சிப் பூ, காந்தள் பூ, வெட்சிப் பூ, குறிஞ்சிப் பூ, மல்லிகைப் பூ, குவளைப் பூ, அனிச்சம் பூ, கொன்றைப் பூ, வஞ்சிப் பூ, மருதம் பூ, முல்லைப் பூ, வாழைப் பூ, வஞ்சிப் பூ, தும்பைப் பூ, தாழம் பூ, தாமரைப் பூ ஆகிய பூக்களின் பெயர்கள் அந்த கொண்டை ஊசி வளைவுகளுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மலைப்பாதை வனப்பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஊடாக சென்றது. செல்லும் வழியிலேயே மேகங்கள் சாலைக்கு இறங்கியிருந்தன. மேகங்கள் பொழிந்த சாரல் மழையும், குளிர் காற்றும் பயணத்தை தித்திப்பாக்கின. வழியெங்கும் ஆங்காங்கே அருவிகள் கொட்டிக் கொண்டிருந்தன. பசுமையான நில பரப்பு கண்களுக்கு விருந்து வைத்தன. மேகமலை சுற்றுலா வணிக வலைக்குள் இன்னும் சிக்கவில்லை என்பதால், பசுமை மாறாத இயற்கை தவழ்ந்து விளையாடுகிறது. உயர்ந்த மலைகள், ஆழமான பள்ளங்கள், மலைகளை கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் வெண் நிற மேகங்கள், அழகிய ஏரி என இயற்கை அழகுகள் கொட்டிக் கிடந்தன.
திரும்பிய பக்கம் எல்லாம் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் தேயிலை. தேயிலையும், காபியும் அதிகளவில் இங்கு பயிரிடப்படுகிறது. பெரிய அளவிலான கடைகள் இங்கு இல்லை. ஹைவேவிஸ் பகுதியில் சில உணவகங்கள் உள்ளன. தங்குவதற்கு சில தனியார் ரிசார்டுகள் உள்ளன. யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாகவும் மேகமலை உள்ளது. சின்னச் சுருளி இங்கு தான் உற்பத்தியாகிறது.
அசர வைக்கும் மகாராஜா மெட்டு
மேகமலையில் அசர வைக்கும் ஒரிடம் மகாராஜா மெட்டு. தார் சாலைகள் முடிந்து கரடு முரடான சாலையில் பயணிக்க வேண்டியிருக்கும். சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்களில் பயணிப்பது சற்று சிரமத்தைத் தரும். அச்சிரமங்கள் இயற்கையின் பேரழகில் மறைந்து போகும்.
மகா ராஜா மேட்டிற்கு செல்ல டாடா சுமோ போன்ற வாகன வசதி உண்டு. 1000 ரூபாய் முதல் 1500 வரை வசூலிக்கப்படுகிறது. நமது கார்களை நிறுத்தி விட்டு, அவற்றில் சென்று திரும்பலாம். இரு சக்கர வாகனங்களிலும் செல்ல முடியும். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களுக்கு ஊடாக கரடு முரடான மண் சாலைகள் ஏறி இறங்கி, வளைந்து நெளிந்து செல்லும். மகாராஜா மேட்டிற்கு செல்ல வனத்துறை நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீல வானம் விரிந்து கிடக்கும். அதற்கு கீழே வெண் நிற மேகங்கள், பஞ்சு போல அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகள் பசுமை உடை உடுத்தி மிடுக்காக காட்சி தரும். மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது, மேகங்கள் நமது தலைக்கு மேலும்,கால்களுக்கு கீழும் மிதந்து கொண்டு இருக்கும். மலைகளில் ஆங்காங்கே அருவிகள் கொட்டிக் கொண்டிருக்கும். இவற்றிக்கு கீழ் நிலமும் பச்சை பசேலென கண்களுக்கு விருந்து தரும். குளிர் காற்று முகத்தை வருடிச் செல்லும். இரம்மியமான இச்சூழல் மனதிற்கு இதமாக அமையும். இந்த நிலப்பரப்பு புதுமையான அனுபவத்தை தரக்கூடும். அது மட்டுமின்றி பல அழகான புகைப்படங்களும் கிடைக்கக்கூடும். அதனால் போட்டோ சூட் நடந்த சில நிமிடங்களை செலவிட வேண்டி வரும்.
தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் மேகமலை முழுக்க பரவியிருக்கின்றன. இங்கு டீத் தூள் உருவாகும் முறையை நபர் ஒருவருக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம். மேகமலையில் அண்மை காலமாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது.
இயற்கையின் பேரழகை குறைந்த செலவில் கண்டு இரசிக்க உகந்த இடம் மேகமலை. அதிக எதிர்பார்ப்புகள் இன்றி ஒரு முறை சென்று வரலாம். அதிக அளவிலான பசுமையான நினைவுகளை தரக்கூடும்.
(பயணங்கள் முடிவதில்லை)