சுற்றுலா செல்வதும், ஊர் சுற்றுவதும் ஒன்றல்ல. திட்டமிட்டபடி சென்று திரும்புவது சுற்றுலா. எந்த இலக்கும் இன்றி மனம் போன போக்கில் சாலையில் செல்வது தான், ஊர் சுற்றுதல். சுற்றுலா செல்வதில் கிடைக்கும் இன்பங்கள், அனுபவங்களை விட, நூறு மடங்கு இன்பங்களும், அனுபவங்களும் ஊர் சுற்றுதலில் கிடைக்கும்.




அப்படி எந்த இலக்கும் இல்லாமல் வால்பாறையை நோக்கி மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஏறிக் கொண்டிருந்தோம். விடியற்காலையில் கோவையில் இருந்து கிளம்பிய எங்கள் டூவிலர், அழியார் அணையை தாண்டி கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து நெளிந்து மலையேறியது. இரம்மியமான காலைப் பொழுது. பனி சூழ்ந்த சாலை. சில்லென வீசும் காற்று. உடலை மெல்ல துளைக்கும் குளிர். பசுமை போர்த்திய இயற்கையின் கொள்ளை அழகு. ஏதிரே வருவது ஆளா இல்லை, யானையா எனத் தெரியாத பயம் என அன்றைய காலைப் பொழுது அழகானதாக விடிந்திருந்தது. அப்போது ஏதேச்சையாக கண்ணில் பட்ட அதிரப்பள்ளி வழிகாட்டி போர்டு, எங்கள் பயணத்தை மேலும் அழகூட்டியது.




சினிமாக்களின் சொர்க்கபுரி


அதிரப்பள்ளி இந்தப் பெயரை எங்கோ நான் கேள்விப்பட்டிருக்கிறோமே என யோசித்தேன். பாகுபலி, ராவணன் உள்ளிட்ட படங்களில் உயரமான ஒரு அருவி கொட்டுமே, அந்த அருவி தான் என்பது நினைவுக்கு வந்தது. இங்கு புன்னகை மன்னன் படம் எடுக்கப்பட்டதால், இந்த அருவிக்கு புன்னகை மன்னன் பால்ஸ் என அழைக்கப்படுவதும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் பலவற்றில், அசர வைக்கும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியை காட்சிப்படுத்தியுள்ளனர். இவ்விடம் சினிமா படப்பிடிப்புக்கான சொர்க்கபுரியாக விளங்குகிறது.




சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் வண்டியை திருப்பினோம். தேயிலைத் தோட்டங்கள், அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகள் வழியாக சோலையார் அணையை கடந்ததோம். தமிழ்நாடு எல்லை முடிந்து, கேரளா வரவேற்றது. உள்ளே நுழைந்ததும் மலக்கபாறா கேரள வனத்துறை சோதனைச் சாவடி வழிமறித்தது. அங்கு பெயர், தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து விட்டு, நுழைவுச் சீட்டை பெற்றோம். அச்சீட்டில் நமது நுழைவு நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரத்திற்குள் வாழச்சால் சோதனைச் சாவடியை அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் கட்ட நேரிடும். இடையே எங்கேயும் வண்டியை நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.


ஆபத்தும், அழகும் மிகுந்த சாலை


மலக்கபாறாவில் இருந்து அதிரப்பள்ளிக்கு 50 கிலோ மீட்டர் தூர வனச் சாலை துவங்கியது. ஒன்றரை மணி நேர பயணம். இரு புறமும் சூழ்ந்திருக்கும் பசுமை. அண்ணாந்து பார்த்தால் வானம் தெரியாத அளவு மூடியிருக்கும் மரங்கள். அடர் வனத்தின் ஊடாக வளைந்து நெளிந்து செல்லும் சாலை. எந்நேரமும் வனவிலங்குகள் குறுக்கிடலாம். அதற்கு அடையாளமாய் சாலைகளில் ஆங்காங்கே கூட்டுக் கூட்டாக யானைச் சாணங்கள். இதயம் படபடத்தது. ஆர்வமும், பயமும் கலந்த உணர்வு. மெல்ல வண்டியை ஒட்டினோம். பகல் பொழுது என்பதால் வனவிலங்குகள் எதுவும் தென்படவில்லை.




நீல வானம், வெள்ளை மேகக்கூட்டம், பச்சை மலை எனக் கொட்டிக் கிடந்த இயற்கையின் அழகு, மனதைக் கொள்ளை கொண்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வாழச்சால் சோதனைச் சாவடியை அடைந்தோம். அதனைக் கடந்ததும் வாழச்சால் நீர்வீழ்ச்சிக்குள் நுழைந்தோம். சாலக்குடி ஆற்றில் சலசலத்து நீரோடிக் கொண்டிருந்தது. சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி என்றாலும், கொள்ளை அழகு. கிட்ட நெருங்க முடியாது. தூர நின்றபடி புகைப்படங்களை எடுத்து விட்டு, பூங்காவிற்குள் ஒரு சுற்று சுற்றி கிளம்பினோம்.


இந்தியாவின் நயாகரா




மீண்டும் வனப் பயணம் துவங்கியது. வாழச்சால் நீர் வீழ்ச்சியில் இருந்து ஆறரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, அதிரப்பள்ளி. வால்பாறை குளிரில் நடுங்கிய எங்களது உடல்கள், அதிரப்பள்ளி வெயிலில் வியர்த்து கொட்டியது. அதுவரை அமைதியாக வந்து கொண்டிருந்த சாலக்குடி ஆறு, அதிரப்பள்ளியில் அதிர்ந்தது. இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அதிரப்பள்ளியில், வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வெண்மை நிற நீரோடை பேரிச்சலோடு கொட்டியது. 24 மீட்டர் உயரத்தில் இருந்து நதி நீர் கீழே விழுந்தது. அருவியில் குளிக்க வாய்ப்பில்லை என்றாலும், மேல் பகுதியில் சாலக்குடி ஆற்றில் குளித்து மகிழலாம்.




அதிரப்பள்ளி அருவியை கீழே இருந்து பார்க்க மலையிறங்கினோம். கரடு முரடான பாதையில் இறங்குவதற்குள் மூச்சு வாங்கியது. மேலே நிமிர்ந்து பார்த்தேன். இயற்கையின் பிரம்மாண்டம் கண் முன்னே அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியை நெருங்க விடாமல் தடுக்க, பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு நின்றபடி கண் கொட்டாமல் நீர் வீழ்ச்சியை இரசித்தேன்.




இயற்கையின் பேரழகில் உறைந்து போனேன். கூடவே என் உடைகளும் நனைந்து போயிருந்தன. அருவி கொட்டும் வேகத்தில், சாரல் பொழிந்தது. வெகு நேரத்திற்கு பின் பிரிய மனமின்றி பிரியும் காதலரைப் போல, திரும்பித் திரும்பி பார்த்தபடி மலையேறினேன்.




மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தால் மீண்டும் வாழச்சால் - வால்பாறை வழியாக டூவிலரில் செல்வது உகந்ததாக படவில்லை. அதனால் சாலக்குடி வழியாக கொச்சி - சேலம் புறவழிச்சாலையை கோவை திரும்பினோம். அந்தப் பாதையிலும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.


சாலக்குடி வழியாக வரும் போது, ஒன்றை கவனித்தோம். கண்ணில் தென்பட்ட ஒவ்வொரு வீடும், கொள்ளை அழகு. ஒன்றை விட ஒன்று பேரழகு. போட்டி போட்டு கட்டியிருப்பார்கள் போல. வழியெங்கும் வாய் பிளந்து, வீடுகளை பார்த்தபடி வந்தோம். பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரான் என்ற இடத்தில் மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அப்பகுதியை கடந்து வருவதற்குள் ஒரு வழியாகி விட்டது. என்றாலும் அச்சுரங்க பாதை திறக்கப்பட்டதும், அதற்குள் ஒருமுறை பயணிக்க வேண்டுமென்ற ஆசையும் உடன் வந்தது.




ஊர் வந்து சேர்ந்து பல நாட்களானாலும் அசர வைத்த அதிரப்பள்ளியிலும், ஆச்சரியப்பட வைத்த சாலக்குடி வீடுகளிலும் மனம் சுற்றிக் கொண்டிருக்கிறது.


(பயணங்கள் முடிவதில்லை)