இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு சைட் டிஷ்ஷாக தயாரிக்க விரும்புகிறிர்களா? அப்போ இந்த புதினா சட்னியை ஒரு முறை முயற்சி செஞ்சு பாருங்க. சுவை அசத்தலாக இருக்கும். புதினாவில் இரும்புச் சத்து வைட்டமின் சி, தையமின் உள்ளிட்ட சத்துகள் அடங்கி உள்ளன. இந்த சட்னியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8-10
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
புதினா - 2 கப்
புளி - 1 துண்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே கடாயில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புதினாவை சேர்த்து, வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காய், புளி சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
பின்பு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.