ISRO Future Plans: இந்திய விண்வெளி வீரர் ஒருவரை 2040ம் ஆண்டிற்குள் நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO):


விண்வெளி ஆராய்ச்சி பணியில் இந்திய பல்வேறு புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை செய்திடாத சாதனையாக நிலவின் தென்துருவத்திற்கு மிக அருகாமையில், சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் உலக நாடுகளை வியக்கச் செய்துள்ளது. அதைதொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்-1 விண்கலமும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை, அதன் தலைவரான சோம்நாத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய கட்டுரை:


கடந்த வாரம் வெளியான ”மனோரமா இயர்புக் 2024” பொதுஅறிவுத் தகவல் களஞ்சியத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில், விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் எதிர்கால திட்டங்கள், அடுத்த கட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி,  “விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் ஒரு குழு பூமியின் தாழ்வட்ட பாதையில் 3 நாட்கள் பயணித்து, பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.


இஸ்ரோ எதிர்காலத் திட்டங்கள்:


வெள்ளி, செவ்வாய் போன்ற கோள்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான விண்கலங்கள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். 2035ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்க பிரதமரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2040ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இஸ்ரோவின் சீரிய முன்னெடுப்புகளால் சர்வதேச அளவில் நாட்டின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 


ஆதித்யா எல்-1 விண்கலம்:


சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 5 ஆண்டுகள் செயல்படும். பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் (எல்-1) எனும் பகுதியில் ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்படவுள்ளது. அங்கிருந்தே சூரியனின் வெப்பச்சுழல் மற்றும் காந்தப்புலன் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தகவல்கள் வழங்கும்.


தேசிய விண்வெளி தினம்:


நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திராயன் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். அதனை பறைசாற்றும் விதமாக நிலவில் லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.