பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி தமிழகம் வர இருப்பது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.1200 கோடி செலவில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க பிரதமர் மோடி அங்கு வர உள்ளார். இதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் மோடி தமிழகம் வருவது பாஜக தொண்டர்களுக்கு உந்துகோலாக அமையும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.
திருச்சி விமான நிலையம்:
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தபின், கூடுதலாக புதிய விமான நிறுவனங்களும் தங்களது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூழலில் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், புதிய முனையம் 2027-28 ஆண்டுக்குள் 40 லட்சம் பயணிகளை கையாளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய முனையம் முழுமையாக 250 மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட உள்ளது.
புதிய முனையத்தில் உள்ள வசதிகள்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் சிறிய அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் போயிங் போன்ற 200க்கும் அதிகமான பயணிகளுடன் பெரிய விமானங்களும் வந்து செல்லும் விதமாக திருச்சி விமான நிலையத்தை நவீனமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 4 நுழைவாயில்கள், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் உள்ளன.