இராமநாதபுரம் மாவட்டம் இராஜேந்திர சோழரால் ஆளப்பட்டது, அதன் பின்னர்  பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தது,  பின்னர் விஜயநகரத்தை ஆண்ட நாயக்கர்கள் வசம் சென்றது. 17ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசின் கீழ், சிவகங்கை அரசர் மற்றும் இராமநாதபுரம் சேதுபதியின் ஆளுகையின் கீழ் இந்தப் பகுதி இருந்தது. சந்த் சாஹிப்,  ஹைதராபாத் நிசாம், மங்களேஸ்வரி நாச்சியார், மருது சகோதரர்கள் அதன் பின்னர் ஆங்கிலேயர்களும் இந்தப் பகுதியை நிர்வாகம் செய்தனர். அடுக்கடுக்கான வரலாற்றுப் பக்கங்களின் வழியே இந்த நிலத்தில் புதிய புதிய மனிதர்கள் வந்தனர். தொண்டி முதல் கொற்கை வரையிலான இந்தக் கடற்கரை சங்க காலம் தொட்டு வணிகர்கள், பயணிகள் வந்திறங்கிய இடம் என்பதால்  அவர்கள் வித விதமான உணவுகளை தங்களுடன் கொண்டு வந்தனர். இராமநாதபுரம், இராமேஸ்வரம், மண்டபம், தேவிப்பட்டினம், தனுஷ்கோடி, பரமக்குடி, கமுதி, இளையாங்குடி, பெரியபட்டினம், கீழக்கரை என பல முக்கிய ஊர்களை உள்ளடக்கியது இராமநாதபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்றாக அரியமான் கடற்கரை திகழ்கிறது. இந்த மாவட்டம் முழுவதும் கடற்கரை சூழ்ந்துள்ளதால் இங்கே மீன் பிடி முக்கிய தொழில், அத்துடன் மீன் உணவு வகைகள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உடனடி மீன் உணவு வகைகள் தயாரித்தல், மீன்பிடி வலைகள் தயாரிப்பு, படகு தயாரித்தல் போன்ற சிறு, குறு தொழில்கள் ஏராளமான உள்ளன.


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 18 | புற்றீசல் பொரி முதல் பொரிச்ச பரோட்டா வரை - இது விரு(ந்)துநகர் விஜயம்...!


 



பாம்பன் பாலம்


இராமேஸ்வரம் ஒரு பெரும் சுற்றுலா தளமாக இன்று திகழ்கிறது, அங்கே விலை உயர்ந்த விடுதிகள் முதல் பாய்கள் விரித்து படுக்கும் சத்திரங்கள் வரை அனைவருக்கும் இடம் உண்டு, உணவும் உண்டு. அசோகா உணவகம், கணேஷ் மெஸ், நாட்டுக்கோட்டை ரெஸ்டாரண்டு, ஹோட்டல் வசந்த பவன், அகர்வால் பவன், சபரீஸ் ரெஸ்டாரண்டு, ஹோட்டல் ஸ்ரீராம் என சைவ உணவகங்களுக்கு பஞ்சமே இல்லை. ஏ.பி.எஸ் ரெஸ்டாரண்டு, ராமேஷ்வரம் சீ புட் ரெஸ்டாரண்டு, ஹோட்டல் வெஞ்சனம், மிஸ்டர் பிஷ், ஆஹான் ரெஸ்டாரண்டு என மீன் மற்றும் பிற அசைவ உணவுகள் வகை வகையாய் கிடைக்கும். சமீபத்தில் கபானா கோரல் ரீப் ரெஸ்டாரண்டில்  முழுமையான கடல் உணவுகளுடன் பெரும் விருந்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது இது ஒரு ரெசார்ட் என்பதால் முன்கூட்டியே நாம் உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு செல்வது நல்லது. 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 17 | சீரக சம்பா பிரியாணி திண்டுக்கல்லுக்கு வந்த கதை - வாய்க்கு போடாதீங்க பூட்டு


பயணத்தில் உங்கள் மூக்கு நன்றாக வாடை பிடிக்கும் எனில் மண்டபம், தங்கச்சி மடத்தில் நல்ல சாலையோர மீன் கடைகள் உங்களை சுண்டி இழுக்கலாம். கனவா மீன்கள், சீலா மீன்கள், சூரை, கிளை வாளை, எலிச்சூரை, சீலா சூரை, இறால் என அந்த நாளின் மீன் அறுவடை உங்களுக்கு விருந்தாக காத்திருக்கும். ராமேஸ்வரத்தின் இந்த மீனவ கிராமங்களில் காரல் மீன் சொதி கிடைக்கும், அடடா அப்படி ஒரு ருசி. மீன்கள் கிடைப்பதை பொறுத்து தான் இந்த உணவுகளின் சமையல் தொடங்கும். பொதுவாக மீன்கள் அதன் மலர்ச்சியுடன் இருக்கும் போது அதன் ருசியே தனி, நகரங்களில் ஐசில் வைத்து கிடைக்கும் மீன்கள் அதன் ருசியை இழந்து விடுகிறது. நீங்கள் மீன்களின் ரசிகர் எனில் ஒரு வருடம் இந்த கடலோரக் கிராமங்களில் வசித்தால் தான் அனைத்து வகையான மீன்களையும் ருசித்துப் பார்க்க முடியும். 




 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 16 | ஆம்பூர் பிரியாணியும் மக்கன் பேடாவும் - பிரியாணி சாம்ராஜ்ஜியத்திற்குள் திக் விஜயம்



பாம்பன், நடராஜபுரம், ஒலைக்குடா, மண்டபம், புதுமடம் என இந்தப் பகுதி முழுவதும் கருவாட்டின் சுகந்தம் கமழும். கருவாடு தொன்மையின் ருசி கொண்டது. கருவாட்டு குழம்பும், நிறைய வெங்காயம் போட்டு செய்யப்படுகிற கருவாட்டு வதக்கல், கருவாட்டுத் தொக்கு, கருவாடு ஊறுகாய் என உணவுகளிலேயே கருவாடு தனித்த சுவையுடைது. கருவாட்டின் சுகந்தத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கும்பா கஞ்சியை உள்ளே தள்ளுபவர்களை பார்த்திருக்கிறேன், எனக்கும் கருவாடு என்றால் தனியாக ஒரு வயிறு முளைக்கும். கச்சத்தீவு பயணங்களில் நாங்கள் செல்லும் லாஞ்சில் மீனவர்கள் கடல் பயணத்திற்கு என்றே பிரத்யேகமாக சமைத்து கொண்டு வரும் உணவுகளை ருசித்திருக்கிறேன். அப்படி ஒரு முறை கப்பல் ரசம் ருசித்திருக்கிறேன், மீனைப் பிடித்து உடனடியாக அவர்கள் வைக்கும் குழம்பை கடல் ஊடே சாப்பிட்ட ருசி இன்னும் நினைவில் சஞ்சரிக்கிறது. இராமநாதபுரத்தின் அனீஃபா பிரியாணி ரெஸ்டாரண்டு, இப்ரீஸ் பார்க் கிச்சன், ஹோட்டல் ஸ்ரீ பீமா விலாஸ், கிடா கறி என பல உணவகங்கள் உள்ளூர் மற்றும் சுற்றுலா செல்பவர்களுக்கு சுவையான உணவுகளை வழங்கி வருகின்றன. பரமக்குடியில் மாமு கார்டன் ஹோட்டல், அலிஃப் ரெஸ்டாரண்டு, பாண்டியன் மெஸ், ஸ்டார் ரெஸ்டாரண்டு எனப் பலவித உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. மாமு கார்டன் ரெஸ்டாரண்டில் காடை மிகவும் ருசியாக இருக்கும், அலிஃப் ரெஸ்டாரண்டில் பிரியாணி பிரமாதமாக இருக்கும். பரமக்குடியில் நூறு ஆண்டுகளாக செயல்படும் காதர் கடை பரோட்டாவை தவற விட வேண்டாம்.  பரமக்குடியில் சவுராஸ்டிரா மக்கள் ஏராளமாக இருப்பதால் எமனேஸ்வரன் பகுதியில் ஏராளமான சுவையான சைவ உணவுகளும் சிற்றுண்டிகளும் கிடைக்கும். 

 

கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 15 | குற்றால குளியலும் பார்டர் கடை பரோட்டாவும் - பொதிகை மலைச்சாரலில் உணவு உலா




 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 14| ஸ்ரீவில்லிபுத்தூர் TO சங்கரன் கோவில் [வழி ராஜபாளையம்] - மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழலில் உணவு உலா


இளையாங்குடியில் கமகமக்கும் நெய்ச்சோறு - தால்சா, முதுகுளத்தூரில் மட்டன் கொழுப்புக் கறி எப்பொழுதும் உங்களுக்காகக் காத்திருக்கும். அரேபிய உணவுகள் கிடைக்கும் பல உணவகங்கள் இன்று இராமநாதபுரம் மாவட்டம் முழுமையிலும் செயல்பட்டு வருகிறது.  கீழக்கரையில் தி ஸ்மோக் ஹவுஸ், ஆர்.ஏ கிச்சன், செவரி டிலைட், கெபாப் ஃபேக்டரி, பிரியாணி ஸ்பாட், க்ஹாலித்ஸ் பிரியாணி, லெப்பய் ஹோட்டல், வீக்கெண்ட் பிரியாணி, சீனியப்பா ஹோட்டல், மாஷா அல்லாஹ் பாஸ்ட் புட் என கீழக்கரை இன்று ஒரு உணவுப் பிரியர்களின் முக்கியத் தளமாகத் திகழ்கிறது.  கீழக்கரையில் என்னதான் உணவகங்கள் இருந்தாலும் அங்கே வீடுகளில் செய்யப்படுகிற  உணவுப் பண்டங்களை வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை. கீழக்கரையில் கிடைக்கும் மட்டன் கலரிக் கறி அலாதியான ருசியுடன் கூடிய ஒரு செய்முறை. ஆட்டுக்குடல், தலைக்கறியில் செய்யப்படுகிற தக்கடியும் நீங்கள் அவசியம் ருசிக்க வேண்டிய ஒரு உணவு. 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 13 | திருநெல்வேலி திருபாகம் முதல் கடையம் வத்தல் குழம்பு வரை - தாமிரபரணி கரையோர பயணம்




மாசிக் கருவாடு நாம் அறிவோம்  ஆனால் கீழக்கரையில் கிடைக்கும் மாசி கொழுக்கட்டை எனக்கு ஆச்சரியம் அளித்த ஒரு பண்டம். அங்கே செய்யப்படுகிற தேங்காய்பால் ஊறுகாயும் ஒரு மிக வித்தியாசமாக செய்முறை. ஓரா மீன் மிளகுதண்ணி ஆணம், காரல் மீன் உப்பாணம், பத்திய மீன் குழம்பு, நெத்திலிக் கருவாடு கிரேவி,  கணவாய் கூந்தல் ரோஸ்ட், நண்டு மசாலா, சீலா கருவாடு தொக்கு, இறால் முருங்கைக்காய் கிரேவி, மஞ்சச்சோறு என இவை எல்லாம் வேற லெவல் ருசி.  கீழக்கரையில் செய்யப்படும் முட்டை மஞ்சள்பால் ஆணம்  பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படுகிற ஒரு சிறப்பு உணவு.


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்


 



 மட்டன் பட்டை சோறு


 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 11| பதநீர் ஊற்றி செய்யப்படும் சர்க்கரை பொங்கல்.. நாவை சப்பு கொட்ட வைக்கும் நாஞ்சில் நாட்டு பயணம்


கீழக்கரையில் மட்டுமே கிடைக்கும் மட்டன் பட்டை சோறு ஒரு உணவு அனுபவம் என்பேன், பனை மரத்து ஓலையில் சோறு கறிக்குழம்பு என எல்லாவற்றையும் போட்டுத் தருவார்கள் இதைச் சாப்பிடும் போது எனக்கு கேரளாவில் சாப்பிட்ட பொதிச் சோறு ஞாபகத்தில் வந்தது. இது வியாபாரிகள் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு உணவு என்றே எனக்கு மனசில் பட்டது. கீழக்கரையில் பெண்கள் செய்து கொடுக்கும்  இடியாப்பச் சோறின் மனமே கமகமக்கும். பிரியாணிகள்  கீழக்கரையில் பல ருசிகளில் கிடைத்தாலும் இந்த ஊரில் நெய் சோறுகள் பல சமயம் பிரியாணியுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று பரிசை வெல்லும். 



கீழக்கரை 


 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 10 | உணவு பிரியர்களின் சங்கமம் சேலம் - ராக்கெட் ரோஸ்ட் முதல் அணுகுண்டு சாப்ஸ் வரை...!


கீழக்கரையில் சைவ உணவு பழக்கம் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதால் சைவ உணவுப் பிரியர்களும் அங்கே தைரியமாக செல்லலாம், ஏராளமான சைவ உணவகங்களும் அங்கே உள்ளன. ரமலான் நேரம் அங்கே கிடைக்கும் ஸ்பெசல் சைவ நோன்புக் கஞ்சி, வெள்ளை நோன்புக் கஞ்சி அருமையாக இருக்கும். அங்கே கிடைக்கும் மஞ்சள் ஆப்பம், கீரை ஆப்பமும், புளிச் சாறு கூட அசத்தலான ருசியுடன் இருக்கும், ஒரு சுவையின் நுட்பத்துடன் இருக்கும். கீழக்கரை பக்கம் ஏதேனும் ஒரு கல்லூரியில் இருந்து பேச அழைத்தார்கள் அல்லது அங்கே ஒரு கல்யாண வீட்டு அழைப்பிதழ் வந்தால் நான் அந்த வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டதிலை. பாய் வீட்டு கல்யாண நெய்ச்சோறு, தால்சா, தக்காளி ஜாம் என இவைகளை எப்பொழுது நினைத்தாலும் அடங்கா ஆசையும் விருப்பமும் வந்து எல்லா வேலைகளையும் கெடுத்து விடும். இதை எல்லாம் விட ஒரு முறை அங்கே கல்யாண வீடு ஒன்றில் நான் சாப்பிட்ட க‌ட‌ல்பாசி இள‌நீர் அல்வா இருக்கே, வேண்டாம் விடுங்க...அதப் பத்தி இப்ப விவரிக்க வேண்டாம்.. அதை விட்டு விடலாம்.  கீழக்கரையில் காலை, மாலை நேரங்களில் இயற்கை முறையில் தயாராகும் தின்பண்டங்களைப் பற்றி தனியாகத்தான் ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆகையால் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்து விடுகிறேன்...நன்றி வணக்கம்.... 


கொலபசி தொடரின் முந்தய தொடர்கள் அனைத்தையும் சுவைக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்