மதுரையில் இருந்து எப்பொழுது குற்றாலம் கிளம்பினாலும் அதிகாலையில் திருமங்கலத்தில் ஒரு தேநீர் அருந்திவிட்டு போகும் வழியில் டி.குன்னத்தூரில் அவித்த மொச்சை பயறுகளும், டி.கல்லுப்பட்டியில் சுருள் பூரியும் வாங்காமல் வண்டி நகராது. அழகாபுரியில் பச்சைக் கொய்யாவும் கொடுக்காப்புளியும் வந்து வாகனத்தில் தானாகவே ஏறும். பயணத்தின் முதல் பாதியில் கரிசல் நிலம், எங்கு பார்த்தாலும் சோளம் பருத்தி கண்ணுக்குத் தெரியும், ஆங்காங்கே கடலைச் செடிகளின் பச்சையையும் வளர்ந்து நிற்கும் துவரைச் செடிகளையும் பார்க்கலாம், கண்ணுக்கு எட்டிய தூரம் வேப்பம் தோப்புகள் தொடுவானம் வரை படர்ந்து கிடக்கும். மெல்ல கரிசல் நீங்கி மேற்குத் தொடர்ச்சி மலைகள் நம் சாலைகளின் அருகாமைக்கு வரும். இந்தப் பகுதி முழுவதுமே சிறு தானியங்கள் தான், இந்த பகுதி உணவுகளிலும் சிறுதானியங்கள் தான் கோலோச்சும்.
கம்மங் கூழ், கேழ்வரகுக் கூழ்-களி உழைக்கும் மக்களின் பிரதான உணவாக இருந்தது. தொடுகறி மட்டும் வசதிக்கு ஏற்ப மாறுபடும். வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள் அங்கேயே தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய், வெங்காயம், மிளகாயை ஒடித்து வாய்க்கால் தண்ணீரில் அலசி கூழுடன் தொட்டுக் கொள்வார்கள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் தோட்டங்களில் விளையும் கீரைகள், சின்ன வெங்காயம், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காயில் செய்த வெஞ்சனம் தயார் செய்வார்கள். விதவிதமாக கீரைகள் விளையும் பூமி என்பதால் வாரத்தில் ஒரு நாள் கடைந்த கீரைகள் எல்லா வீடுகளிலும் இருக்கும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை அப்படியே இடித்து பச்சையாகவும் தொடுகறியாக வைத்துக் கொள்வார்கள், நல்லா சுல்லென இருக்கும். பழைய சோற்றுக்கும் இது ஒரு அற்புதமான காம்பினேசன். முழுக் கத்தரிக்காயில் செய்யும் ஒரு கூட்டும் இந்தப் பகுதியில் கிடைக்கும்.
கம்பு, சோளம், கேழ்வரகு, தினை இத்தனை விரிவாக உணவில் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. கம்பு தோசை சுடத் தொடங்கினால் ஒரு தெருவே கமகமக்கும். ஒரு தோசை விரல் தடிமன் இருக்கும். தைப் பொங்கல் மற்றும் ஊர்த் திருவிழாக்களின் போது தான் இந்தத் தோசையின் வாசம் வரும். இட்லி தோசை எல்லாம் ரேசன் கடையில் அரிசி வந்த பிறகு தான் இத்தனை பிரபலமானது. ஒரு வகையில் சிறுதானியங்கள் ஓரம் கட்டப்பட்டதும் கூட இதன் பின்னர் தான் எனலாம். சோள மாவை பெரிய பெரிய தட்டுகளில் ஊற்றி இட்லி போல் அவித்து தருவார்கள். தேங்காய், தக்காளி, வெங்காய, கார, கொத்தமல்லி சட்னிகளுடன் இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எதுவும் இல்லை. கம்பு சோளம் போட்டு செய்யும் இட்லிக்கு புளிச் சட்னி வைப்பார்கள் இவை அப்படி ஒரு பொருத்தமான கூட்டணி. கொஞ்சம் வீடுகளில் இருந்து களப்புக் கடைகளுக்கு செல்வோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கதிரவன் ஹோட்டல் நம்மை வரவேற்கக் காத்திருக்கும். பொங்கல், வடை, ஊத்தப்பம், பூரி என எல்லாவற்றையும் எப்படித்தான் அதே சுவையில் தருகிறார்களோ என்று எனக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஆச்சரியமாக இருக்கும், வாசலில் வந்து நின்று ஒரு காபி குடித்த பிறகு சமயங்களில் மீண்டும் கை அங்கே சுடச்சுட வந்து விழும் உளுந்தவடை நோக்கி போகும் இருப்பினும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கிளம்புவோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டல் 100 ஆண்டுகளாக இயங்கும் நிறுவனம், அங்கே மதியம் மீல்ஸ், மாலை பலகாரம் என நாள் முழுவதுமே விதவிதமான உணவுகளை முழுமையான ஈடுபாட்டுடன் சமைத்து பரிமாறுவார்கள் என்பதை சாப்பிடும் போது உணர்வீர்கள். ஸ்ரீவியில் கணேசன் டீ ஸ்டாலில் டிபன், வெரைட்டி ரைஸ், தயிர் வடை, கேசரி என இந்தக் கடைக்கும் ஒரு பெரும் வாடிக்கையாளர் பட்டாளம் உண்டு. அதே போல் தேவகி ஹோட்டலில் கிடைக்கும் உப்புக் கண்டம் மட்டன் சுக்கா அவசியம் ஒரு முறை சாப்பிட வேண்டிய சுவையான செய்முறை. பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சுரேஷ் புரோட்டா ஸ்டாலும் இந்த ஊரில் மாலை நேரத்தில் பரபரப்பாக இருக்கும் இடங்களில் ஒன்று. இன்னும் கொஞ்சம் தூரம் கடந்தால் பஞ்சாலைகள், பருத்திக் கிட்டங்கிகள் நம்மை வரவேற்றால் நாம் ராஜபாளையம் நெருங்கி விட்டோம் என்று அர்த்தம். ராஜபாளையத்தில் சைவ உணவு என்றால் ஆனந்தா போர்டிங் தான் அங்கே இட்லி, தோசை, வெண்பொங்கல், கோதுமையில் செய்த பூரி அதற்கு அற்புதமான உருளைகிழங்கு பட்டாணி சப்ஜி என என்றும் மாறாத சுவையுடன் இருக்கும். மதியச் சாப்பாடும் ஆனந்தா போர்டிங்கில் பிரமாதமாக இருக்கும்.
அசைவ உணவு என்றால் ஆனந்த விலாஸ். பிரியாணி, பரோட்டா , சால்னா, முட்டை பரோட்டா, ஆப்கான் பரோட்டா, பட்டன் பரோட்டா, நான், பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் இப்படியாக எல்லாவகைகளுமே நேர்த்தியாக இருக்கும். ராஜபாளையம் அம்சவள்ளியிலும் பரோட்டா, சப்பாத்தி அருமையாக இருக்கும். ராஜபாளையத்தின் பெரும் அடையாளமாகவே இந்த கூரைக்கடை மாறிவிட்டது. நந்தினி சிக்கன், சோலை சிக்கன், காடை, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா, ஈரல், ஐரை மீன், வரச்சிக்கன், விரால் மீன், குழம்புகள் என அனைத்தும் விறகு அடுப்பு சமையலில் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் கரண்டி ஆம்லேட் மணக்கத் தொடங்கினால் நாம் தளவாய்புரம் கண்ணாடி கடைக்கு அருகில் வந்து விட்டோம் என்று அர்த்தம்.
அடுத்து நம்மை வரவேற்கும் ஊர் சங்கரன் கோவில், சங்கரன் கோவில் என்றாலே அங்கே 150 ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருக்கும் சுல்தான் பிரியாணி தான் என் நினைவுக்கு வரும். காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா கிடைக்கும். தமிழகத்தின் முத்திரையான பிரியாணிகளில் சுல்தான் பிரியாணி முக்கிய இடம் வகிக்கும், சாமானியர்கள் சாப்பிடும் ஒரு சாதாரண கடை தான் ஆனால் அசாதாரண ருசி, மனம் வியக்கும் ருசி. நான் எப்படிப் பார்த்தாலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த வழியே குறுக்கு மறுக்கப் போகும் போது எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன், ஒரே பதம், மாறாத ருசி என்றால் அதே மாறாத ருசி, சாப்பிடுவதற்குக் கூட அதே மேசையும் பெஞ்சும் தான், எந்த ஆடம்பரமான கட்டமைப்பும் இல்லை. ஆனால் இந்தக் கடை இன்று தமிழகத்தின் உணவு வரைபடத்தில் தனக்கான இடத்தை கச்சிதமாகப் பெறுகிறது. செய்ய வேண்டிய புதுமைகள் எல்லாம் அலங்காரத்தில் அல்ல சுவையிலும் உணவிலும் என்பதை இந்த கடை 150 ஆண்டுகளாக உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. சுல்தான் கடையின் நீங்கள் பொட்டலம் வாங்கலாம் அல்லது அங்கேயே சாப்பிடலாம், இந்த கடையில் இடம் கிடைப்பது அத்தனை சுலபமல்ல, ஒவ்வொரு முறை நான் செல்லும் போதும் கல்யாண வீடு போலச் சாப்பிடும் யாரேனும் ஒருவரின் முதுகுக்குப் பின் நின்றே தான் இடம் பிடித்திருக்கிறேன். சுல்தான் பிரியாணி கடை வாசலில் ஒரு பெரியவர் பீடாவுடன் அமர்ந்திருப்பார்.
புளியங்குடியில் அற்புதமான எலுமிச்சை கிடைக்கும், அங்கே ஒரு சர்பத் குடித்து விட்டு நம்முடைய அடுத்த நிறுத்தம் கடையநல்லூர். கடையநல்லூரில் பரோட்டா, ஸ்ப்ரிங் பரோட்டா, இடியாப்பம், பீஃப், மட்டன் சுக்கா, நெய்ச் சோறு, பிரியாணி என இதுவும் ஒரு அசைவ நிலம். சுங்க முத்து கடை, மூளிக் கடை, நல்லூர் கல்யாண விருந்து என பல நல்ல கடைகள் இங்கு உள்ளன. உங்கள் வயிற்றில் இடம் இருந்தால் இடைக்காலில் நியாஸ் கடையில் புரோட்டா சாப்பிடலாம் அல்லது பார்சல் வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இன்னும் குற்றாலம் வரவில்லை அதனால் சாரல் காற்று இங்கேயே தொடங்கி விட்டது, வயிற்றிலும் இடம் இல்லை. அடுத்த அத்தியாயத்தில் தென்காசி-குற்றாலம் பக்கம் உலவலாம், வயிற்றில் கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு பயணத்திற்குத் தயாராக இருங்கள்.
கொலபசி தொடரின் முந்தய தொடர்களை சுவைக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்