காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இனி தினமும் மாலை குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் சவாலான விஷயம். ஜங் ஃபுட் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். ஆனால் அது உடல் நலத்திற்கு மிகவும் கேடு. தினசரி என்ன செய்வது என குழம்பி நிற்கும் பெற்றோர்களுக்கு கிடைத்த செம்ம ஈசியான ரெசிபி ஒன்னு இருக்கு. வெறும் 4 பொருட்கள் இருந்தால் போதும். அசத்தலான சுவையில் கோதுமை பணியாரம் தயார் செய்துவிடலாம்.
கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து காரணமாக அது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இப்படி சத்துக்கள் நிறைந்த கோதுமையில் சப்பாத்தி, பூரி, புட்டு என வழக்கம்போல் செய்யாமல் மிகவும் சுலபமாக செய்யும் கோதுமை பணியாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள். பின் உங்கள் குழந்தைகள் ஜங் ஃபுட்டை தவிர்த்து இப்படி செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.
கோதுமை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு கப் கோதுமை மாவு
- 3/4 கப் துருவின தேங்காய்
- 4 வாழைப்பழம்
- 3/4 கப் வெல்லம்
- நெய்
- உப்பு
- ஏலக்காய் தூள்
- முந்திரி (தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)
கோதுமை பணியாரம் செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 4 வாழைப்பழம், துருவின தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கோதுமை மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் 2 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.
விருப்பப்பட்டால் நெய்யில் 10 முந்திரியை வறுத்து இந்த மாவில் சேர்க்கவும். பின் பணியாரச் சட்டியில் நெய் ஊற்றி பணியாரம் சுட்டெடுத்தால் கோதுமை பணியாரம் ரெடி. மணக்கும் நெயில் சுட்ட பணியாரம் பக்கத்து தெரு வரை மணக்கும்.
வீட்டில் பணியார சட்டி இல்லையா கவலைய விடுங்க. தோசைக்கல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்ல நெய் சேர்த்து குட்டி குட்டி ஊத்தாப்பம் போல் ஊற்றி சூட்டு சாப்பிடலாம். இந்த கோதுமை பணியாரம் சற்று பதமாக தான் இருக்கும் வழக்கமான பணியாரம் போல் மொறு மொறுவென இருக்காது. கோதுமையுடன் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் கருகும் தன்மை அதிகம் இருக்கும். அதனால் அடுப்பை சிம்மில் வைத்து சமைக்க வேண்டும். நெய் பிடிக்காதவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்க்கென்று பிரத்யேக சுவை இருப்பதால் கோதுமை பணியாரத்தின் சுவையும் மனதில் நிற்கும் அளவு இருக்கும்.
அரியலூர் நாட்டு பட்டாசு ஆலை விபத்து.. 10 ஆக உயர்ந்த உயிரிழப்பு..!
School Reopen: முடிந்தது காலாண்டு விடுமுறை: இன்று அரசுப் பள்ளிகள் திறப்பு! குஷியில் பெற்றோர்கள்!