தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (அக்.9-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 6- 12ஆம் வகுப்பு வரை அக்.3 அன்றே பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு 2023-24ஆம் கல்வி ஆண்டில் சரியாக பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கத் தொடங்கின. இதற்கிடையே மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு செப். 27ஆம் தேதி வரை முதல் பருவம் எனப்படும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. பள்ளிக் கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டு நாட்காட்டியில் இரண்டாம் பருவத்தில் பள்ளிகள் 03.10.2023 அன்று திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 28.09.2023 முதல் 08.10.2023 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பருவத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
முன்னதாக அக்.3ஆம் தேதி வரை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக ஒன்றியம் தோறும் 03.10.2023 முதல் 05.10.2023 முடிய இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பயிற்சி நாட்கள் தவிர்த்த பிற நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து இரண்டாம் பருவத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். இதனால் பள்ளிகளில் விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வகுப்புகள் இன்று (அக்.9) தொடங்கி உள்ளன.
திட்டமிட்ட தேதியில்..
அதே வேளையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2023- 2024 கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளது போன்றே அக்.3 முதல் இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!