லடாக் கார்கிலில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடந்த தேர்தலில் 77.61 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது, 74,026 வாக்காளர்கள் தங்களின் வாக்கினை செலுத்தி இருந்தனர். இதுகுறித்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 


முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்:


இந்நிலையில் லடாக் தன்னாட்சி கவுன்சில் - கார்கில் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்ட 26 இடங்களில் 22 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு,  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.


யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் காங்கிரஸ் 10 இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.


எகிறி அடித்த INDIA கூட்டணி:


இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாஜக வெற்றிபெற்ற 2 இடங்களில் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்த இடத்திலும், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பாஜக அதிலும் தோல்வியை சந்தித்திருக்கும்.


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை முன்னிலைப்படுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது. 


 


"பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்"


தேர்தல் வெற்றி குறித்து பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீரை பிரித்து, அரசியலமைப்பு உறுதி செய்த சிறப்பு அந்தஸ்தை பறித்த பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, நடந்ததற்கு கார்கில் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. உடன்படவில்லை" என்றார்.


லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்தை வேண்டியும் அதன் கலாசாரம், நிலம், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரியும் அங்கு இருக்கும் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து கார்கில் ஜனநாயக கூட்டணியை அமைந்திருந்தனர். இவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்து. 


பவுத்தர்கள் அதிகம் வாழும் மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக மொத்தமாக ஒரு இடத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை