அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அருகே நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவரின் பட்டாசு தயாரிப்பு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்ன நடந்தது..?
அரியலூர் - திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் யாழ் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் பெயரில் இயங்கி வந்த திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இன்று காலை
10 மணி அளவில் திடீரென வெடித்து சிதறி உள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு பட்டாசு ஆலை பணிகள் துவங்குவது வழக்கம். முன்னதாகவே பணிக்கு வந்த பணியாளர்கள் பட்டாசு பெட்டக அறையில் அமர்ந்து காலை உணவு அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின.
அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஊழியர்கள் தப்பமுடியாமல் உள்ளுக்குள்ளே சிக்கியதாக தெரிகிறது.
சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தாக என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு வெடிக்கத் வாங்கிய பட்டாசுகள் தற்போது வரை தொடர்ந்து வெடித்துக் கொண்டே உள்ளன. அரியலூர், செந்துறை, திருவையாறு, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர் அம்பிகா தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருமானூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமழப்பாடி ராஜேந்திரன் என்பவரது பெயரில் பட்டாசு ஆலை காண லைசன்ஸ் பெறப்பட்டு அவரது மருமகன் அருண்குமார் நிறுவனத்தை நடத்தி வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டாசு ஆலை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா, காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாம் இட்டு தொடர்ந்து நிலைமை கண்காணித்து வருகின்றனர்
கீழப்பழூர், திருமானூர் சாலையின் முன் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் பின்பக்கத்தில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் வயல்களுக்கு இடையில் இந்த பட்டாசு ஆலை பாதுகாப்பு அற்ற முறையில் அமைந்துள்ளது.
திருமானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம தன்னார்வல இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஐந்து உடல்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.