படிக்கும் மாணவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள், பணிபுரிபவர்கள் என எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனைதான். இது நம் வாழ்க்கையையும் நேரடியாக பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சில செயல்கள் மூலம் இந்த சிக்கலைத் தணிக்கலாம்.


கலை 


தினசரி அழுத்தங்களில் இருந்து தள்ளி இருக்க, கலை ஆர்வம் ஒரு சிறந்த வழி. இதுபோன்ற விஷயங்கள் உடலில் எண்டோர்பின்களை வெளியிட வைக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனை எப்படி செய்யலாம் என்றால் அதற்கும் பல வழிகள் உண்டு. பக்கத்தில் இருக்கக்கூடிய நாடகக் குழுவில் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் உங்களை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்தலாம். பாடுவதை விரும்புபவராக இருந்தால், எதாவது ஒரு பாடகர் குழுவில் சேரலாம், யுட்யூபில் பாடி வெளியிடலாம், நடன வகுப்புகள் (பாலே, ஃபோக், ஹிப்-ஹாப், சல்சா போன்றவை) செல்லலாம், எதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்ளலாம். இவற்றின் மூலம் நம் உடல் வெளிப்படுத்தும் எண்டோர்பின்கள் நம் கவலையை எளிதாக போக்குகின்றன.



பிளாகிங்


பிளாகிங் மன அழுத்தத்தை நிர்வகிக்க மட்டுமல்ல, நம் வாழ்வை மேம்படுத்தவும் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். உணர்ச்சிகள், கவலைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்த இது ஒரு தனிப்பட்ட பிளாட்ஃபார்மை வழங்குகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இது இலவசமாக அனைவராலும் செய்ய முடியும் என்பதுதான். மாணவர்கள், வீட்டில் இருப்பவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், முதியவர்கள் வரை எவரும் எந்த நேரத்திலும் பிளாகிங் செய்யலாம். 


யோகா


ஆரோக்கியமான உடலையும் மனதையும் பெறுவதற்கான வழி என்ற கேள்வி வரும்போதெல்லாம், முதல் இடத்தில் இருப்பது யோகா. இது மென்மையான உடல் இயக்கம், மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மனதை சீராக செயல்பட வைக்கிறது. உடல் தளர்வை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. யோகா பயிற்சியானது நம்மிடம் உள்ள பதற்றத்தை விடுவித்து, ஒட்டுமொத்தமாக நம் வாழ்வை மேம்படுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த கருவியாக அமைகிறது.


தொடர்புடைய செய்திகள்: Mumbai Indians: முழுவதும் மும்பை இந்தியன்ஸ்.. ஆசியக் கோப்பை அணியில் ஆதிக்கம் செலுத்தும் ரோஹித் படை.. 8 வீரர்களுக்கு இடமா?


பொழுதுபோக்கு


நாம் மிக மிக அழுத்தமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். இந்த வேகமான வாழ்வு நம்மை நாமே ஆராய்ந்துகொள்ள அனுமதிப்பதில்லை. வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் படிப்புகளுக்கு இடையில், நாம் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை நம்மால் கவனிக்க முடிவதில்லை. இங்குதான் பொழுதுபோக்குகள் உதவியாக இருக்கும். பொழுதுபோக்குகள் இன்பத்தை மட்டுமல்ல, படைப்பாற்றலுக்கான இடத்தையும் நம் மனதிற்கு வழங்குகிறது. அதோடு அழுத்தங்களிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புகிறது.



உடல் பயிற்சி


ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதிற்கு வழிவகுக்கும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. உடல் செயல்பாடு மூலம் சுரக்கும் ஹார்மோனான கார்டிசோல் மன அழுத்தத்தை குறைக்கிறது. அதோடு உடல் தளர்வு மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது. நன்றாக தூங்குவது, மன அழுத்தத்தைத் தாங்கும் மனநிலைக்கு நம்மை அழைத்து செல்கிறது.


மற்றவர்களுடன் பேசுதல்


நாம் சமூகமாக வாழ்ந்து பழகியவர்கள். நமக்கு பிடித்த நபர்களுடன் சில நிமிடங்களைச் செலவழித்தால் போதும், எந்த நேரத்திலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். மன அழுத்தத்திற்கு நாம் சிக்கலான தீர்வுகளைத் தேடுகிறோம், ஆனால் சில சமயங்களில் நின்று, உட்கார்ந்து, சிலருடன் பேசுவதே சிறந்த பதிலாக அமைகிறது.


மன அழுத்தம் 


மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கிறது. எனவே இந்தச் செயல்பாடுகளை நம் வாழ்க்கை வழக்கத்தில் இணைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு வழியாக அமையும். மன அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது ஒரு சில நாட்களில் செய்துவிடுவது அல்ல, நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டி இருக்கும். இதில் சிறிய மாற்றங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.