மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு, இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி இருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ”தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். இவ்வாறு இந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநில இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது. நியாயமற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து, அனைவருக்குமான தேர்வாக இதனை மாற்றுக” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு சொன்னது என்ன?
என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை கடந்த 17ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ.டி. கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி. ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு இதுவாகும்.
குவியும் கண்டனங்கள்:
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது எனவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு:
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “அலுவல் மொழி விதிகள் 1974, மாநிலங்களை 3 பகுதிகளாக பிரித்து இருப்பதும், தமிழ்நாட்டிற்கு ஒட்டு மொத்தமாக விதிவிலக்கு தந்திருப்பதும் கூட தேசிய தேர்வு முகமையால் புறம் தள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல. வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.