பூசணி விதைகள்:
பூசணிக்காய் அமாவாசை அன்று சுற்றி உடைப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் ஒரு பொருள் அல்ல. அது பல வகையில் நன்மை அளிக்கக்கூடியது. பூசணி விதைகளின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவற்றின் பயன்பாடு மருத்துவ தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதை பற்றி அறியாதவர்களுக்கு பூசணி விதைகள் பற்றின சில குறிப்பு உள்ளே.
சிறுநீரக தொற்று, சிறுநீரக பாதை தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரகப்பை தொற்று, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு பூசணி விதை தீர்வாகும். இதில் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9 மற்றும் வைட்டமின் E, C, K நிறைந்துள்ளன. அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்வதால் பல ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம்.
பூசணி விதைகளில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் அவை வயிற்று புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கக்கூடிய வல்லமை பெற்றது. அதிக அளவிலான மெக்னீசியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.
சர்க்கரை நோய்க்கு அருமருந்து:
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் மேற்கொண்ட ஒரு அறிக்கையின் படி பூசணி விதைகளில் ஒமேகா-3 அமிலம் உள்ளதால் இரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோயை குறைக்க அல்லது வராமல் தடுக்க உதவுகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் தன்மை கொண்ட அமிலம் இந்த விதைகளில் உள்ளதால் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாகிறது. படுக்கைக்கு செல்லும் முன் 1 ஸ்பூன் பூசணிவிடைகளை சாப்பிடலாம்.
எலும்புகள் பலப்படும்:
பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. எலும்பு முறிவை கூட தடுக்கும் ஆற்றல் உள்ளது. ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி தன்மை உள்ளதால் உள்காயங்களை சரி செய்யும்.
எப்படியெல்லாம் சாப்பிடலாம் :
பூசணி விதைகளை நன்றாக வெயிலில் காயவைத்து, பொடி செய்து 1 ஸ்பூன் அளவு பாலில் கலந்து பருகலாம். பெண்கள் இந்த பொடியை சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும். பூசணி விதைகளை கெட்டியான தயிரில் தூவி சாப்பிடலாம். ஒரு சாலட் செய்யும் போது அதற்கு மேல் பூசணி விதைகளால் அலங்கரித்து சுவைக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்