மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் ஒருவர் ஆறு உறுப்புகள் கேன்சரால் செயலிழந்த நிலையிலும், வாழ வேண்டும் என்ற உத்வேகத்தால் எதிர்த்துப் போராடி வருகிறார்.


கேன்சர் போராளி


46 வயதான மணப்பெண் மேக்கப் கலைஞர் ஹன்சா ரங்வானி, ஆறு உறுப்புகளை இழந்து தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு உடலில் இப்போதைக்கு கேன்சர் இன்றி வாழ்ந்து வரும் போராளியாக உள்ளார். அவரது கருப்பைகள், பெருங்குடல், பித்தப்பை, அப்பெண்டிக்ஸ், கல்லீரலின் ஒரு பகுதி மற்றும் ஓமெண்டத்தின் முழு பெரிட்டோனியல் மேற்பரப்புடன், மற்றும் ஃபலோபியன் குழாய்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்து சில மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் விரும்பியதைச் செய்யத் தொடங்கியுள்ளார்.


இரண்டு குழந்தைகளின் தாயான ஹன்சா, கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில், நோய் அவரது பெரிய குடலில் இருந்து கருப்பை, பெரிட்டோனியம் மற்றும் கல்லீரல் வரை வேகமாகப் பரவுவதைக் காட்டியுள்ளது.



வேகமாக பரவிய கேன்சர்


ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை செய்த பிறகு, ஹன்சாவின் நிலையை மதிப்பாய்வு செய்த, மும்பையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சங்கேத் மேத்தா, அவரது கருப்பை கேன்சர் இன்னும் அதிகரித்து வருவதைக் கண்டறிந்தார். "நோய் வேகமாக பரவியுள்ளது. கட்டியின் அளவு அதிகமாக இருப்பதால் அவரால் சாப்பிட முடியவில்லை, உடலில் சக்தி இல்லாததால் நடக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: IND-W vs PAK-W : மகளிர் டி20 உலகக்கோப்பை: மந்தனா இல்லாமல் களம் இறங்கும் இந்தியா! பாகிஸ்தானை வெல்லுமா?


நோயற்றதாக மாறிய முழு உடல்


மேலும் பேசிய அவர், மேத்தாவும் அவரது குழுவினரும் ஹன்சாவுக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையாக இருந்தாலும் பரவாயில்லை, அனைத்து நோயுற்ற உறுப்புகளையும் அகற்ற அறிவுறுத்தினர், ஏனெனில் ஆபத்துகள் இருந்தபோதிலும் அதுதான் ஒரே வழி என்று தோன்றியது என்றார். "நாங்கள் அவருக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது, அவரது முழு வயிற்றுப் பகுதியும் நோயற்றதாக மாறியுள்ளது," என்று அவர் கூறினார்.



பல உறுப்புகள் இன்றி வாழ்வது எப்படி?


பல உறுப்புகள் அகற்றப்பட்ட ஒரு நோயாளி இயல்பான வாழ்க்கையை நடத்துவது நம்பத்தகுந்ததா என்பது குறித்து பேசுகையில், நவீன மருத்துவம் அதை சாத்தியமாக்கியுள்ளதாக மேத்தா கூறினார். "சிகிச்சையின் முன்னேற்றங்கள் மற்றும் கீமோதெரபி, டார்கெட் சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை - அத்துடன் அறுவை சிகிச்சையின் மேம்பட்ட நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம், நீண்ட கால உயிர்வாழ்வு மற்றும் ஸ்டேஜ் 4 வயிற்று புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் கூட உள்ளன", என்று கூறியுள்ளார்.


வொக்கார்ட் மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் போமன் தபார், ஹன்சா போன்ற நோயாளிகள் காட்டியிருப்பது போல், ஸ்டேஜ் 4 புற்றுநோய் இனியும் 'மரண தண்டனை' அல்ல என்றார். இருப்பினும், இந்த சிகிச்சைகள் நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், தொடர்ச்சியாக பரிசோதனைகள் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போதைக்கு, ஹன்சா, மற்றும் அவரது குடும்பத்தினர், நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். ஆனால் துணிச்சலான ஹன்ஸா தனது வாழ்க்கையை வாழும் அதே வேளையில், பராமரிப்பு சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். சமையல் செய்வது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, மற்றும் மேக்கப் செய்தபின் வரும் மணமகளின் புன்னகை ஆகியவை அவரது கண்ணீரையும், கவலைகளையும் மங்கச் செய்வதாக கூறுகிறார்.