கல்லூரி வாழ்க்கை வளர்ச்சி, கற்றல் மற்றும் சுய ஆய்வு வாய்ப்புகளை வழங்குகிறது. சவால்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், இந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
நல்வழியில் வாழ்க்கை நடத்திச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்
படிப்பு என்பது இன்று நம் வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய பங்காக வகிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் கல்வி சூழல் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, இது மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் கொண்டுவருகிறது. மாணவர்கள் எந்த பாதையை நோக்கி அவர்கள் வாழ்க்கையில் பயணிக்க போகிறார்கள் என்பதை முடிவு செய்ய இரண்டு காலகட்டங்கள் இருக்கின்றன. ஒன்று பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அவர்கள் எடுக்கும் குரூப், அதேபோல் 12 ஆம் வகுப்பு முடித்ததற்கு பின் அவர்கள் சேரும் கோர்ஸ். பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் என்ன கோர்ஸ் எடுக்கிறார்களோ அதை சார்ந்த துறையிலேயே வேலை செய்கிறார்கள். மேலே கூறிய இரண்டு காலகட்டங்களில் தான் மாணவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வாறு ஏற்படுகின்ற மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சென்றவுடன் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பிக்கின்றன. அவர்களின் கவனம் பல்வேறு விஷயங்களில் செல்ல ஆரம்பிக்கின்றன, இதுவே அவர்களுக்கு பின்னாளில் பிரச்னையாக உருவாகிறது. நல்வழியில் வாழ்க்கை நடத்திச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும். இதோ பார்ப்போம்
1. படிப்பில் கவனம்
பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சென்றவுடன் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பிக்கிறது. அவர்களின் கவனம் பல்வேறு விஷயங்களில் செல்ல ஆரம்பிக்கின்றன இதுவே அவர்களுக்கு பின்னாளில் பிரச்னையாக உருவாகிறது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். தொடக்கத்திலிருந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தாலே போதும் பெரும்பாலான பிரச்னைகளை தவிர்க்கலாம். கவனச்சிதறலின்றி படிக்க வேண்டும், தினமும் படிப்புக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவும், படிப்பில் சிரமம் ஏற்பட்டால் யாரிமாவது உதவி கேட்டு படித்தால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.
2. மற்றவர்களுடன் நல்ல உறவை வைத்திருங்கள்
காதல் உறவுகள் மற்றும் நட்புகளில் ஏற்படும் பிரச்னைகள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நட்புறவை மற்றவர்களுடன் நான் ஏற்படுத்தும் போது மனம் மிகவும் அமைதியாக இருக்கும். அதேபோல் ஆசிரியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தும் போது நமக்கு அது பல வகையில் பக்க பலமாக இருக்கும். இதை செய்ய பலரும் தவறிவிடுகிறார்கள். திறந்த மனதுடன் பேசவும், உறவு சம்பந்தமான பிரச்னைகள் கையாள தெரியாது என்றால், நல்ல நம்பகமான மனிதர்களின் உதவியை நாடவும்.
3. தவிர்க்க வேண்டிய போதைப் பழக்கம்
பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளிகளில் படிக்கும் போது பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பதால் தவறான வழிக்கு செல்ல பயப்படுகிறார்கள். கல்லூரிக்கு சென்றவுடன் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இது அவர்களை வீழ்ச்சி பாதையில் எடுத்துச் செல்கிறது. நிறைய பேர் மன அழுத்தத்திற்கு மது ஒரு தீர்வு என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. அதனால்தான் மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அவர்கள் மதுவை ஒரு தீர்வாக யோசிக்கிறார்கள். அது மன அழுத்தம் மற்றும் கவலையை அதிகரிக்குமே தவிர, கண்டிப்பாக அவற்றை சரி செய்யாது. போதைப் பொருட்கள் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை
4. நல்ல தூக்கம்
இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் தூக்கத்திற்கு முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. இன்று ஒவ்வொரு நாளும் நான் தூங்கும் நேரம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இது உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை கண்டிப்பாக உருவாக்கம். கண்டிப்பாக சரியான நேரத்தில் தூங்கி எழுவதன் மூலம் பலவிதமான பிரச்னைகளை தவிர்க்கலாம். படிப்பிற்கு எந்த அளவுக்கு முக்கியம் கொடுக்கிறீர்களோ அதே அளவு தூக்கத்திற்கும் தேவை. தினமும் 7-9 மணி நேர தூக்கம் உறுதி செய்யவும், சீரான தூக்க முறையை பின்பற்றவும், தூக்கத்திற்கு முன்பு மொபைல், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.
5. உடற்பயிற்சி
இந்த வயசுல எதுக்கு எக்சர்சைஸ், அதெல்லாம் வயதானவர்கள் பண்றது என்ன சொல்லக்கூடிய மாணவர்கள் நிறைய பேர் இங்கு உள்ளார்கள். உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகவும். பல ஆராய்ச்சி கட்டுரைகள் முறையான உடற்பயிற்சி மனநலத்தை மேம்படுத்துகிறது என தெரிவிக்கின்றன. ஆகையால், காலையோ அல்லது மாலையோ சிறிது நேரம் அதற்காக செலவு செய்யுங்கள். ஒரு நாளுக்கு குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
6. சரிவிகித உணவு
மாணவர்கள் முடிந்த அளவு சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டும். இன்று நம்மில் பெரும்பாலானூர் விரும்பி உண்ணுவது ஜங்க் ஃபுட்தான். இந்த உணவு முறை உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. ஆகையால் இது மனநலம் மட்டும் உடல் நலத்தை பாதிக்கிறது. சரியான உணவு முறையை பயன்படுத்தி தேர்ந்தெடுப்பதன் மூலம் பல பிரச்னைகளை மேற்கொள்ளாமல் தவிர்க்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் சாப்பிடும் நேரங்களை தவறவிடாதீர்கள், குறிப்பாக காலை உணவை தவறாமல் எடுங்கள், போதுமான நீர் குடிக்க வேண்டும்.
7. பொழுதுபோக்கு
கண்டிப்பாக பொழுதுபோக்கு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் தான். படிப்பு படிப்பு என்று அதிலேயே மூழ்கி விடாமல், பொழுதுபோக்கிற்கும் ஒரு இடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மனம் மிகவும் நன்றாக இருக்கும். பெரும்பாலான கைபேசியிலேயே நேரத்தை செலவு செய்கிறார்கள், அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதைத் தாண்டி நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் இவ்வுலகில் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த சில நல்ல பொழுதுபோக்கான விஷயங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் மனநிலையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். சிலர் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் இருக்கின்றனர், இது மனநலத்திலும் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
8. பிரச்னைகளை மற்றவர்களுடன் பகிருங்கள்
இன்று பெரும்பாலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரியானவர்களிடம் எடுத்துச் செல்வதில்லை. பலர் தங்களது பிரச்னைகளை தானே சமாளிக்க முயல்கிறார்கள், அதனால் அவர்களுக்கு முறையான தீர்வு கிடைப்பதில்லை. உங்களால் ஒரு பிரச்னையை தீர்க்க முடியவில்லையெனில், அதை தனித்து சமாளிக்க முயற்சிப்பதை விட, நம்பகமான ஒருவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர்களால் அந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல முடியவில்லை எனில் பெற்றோர்களுடன் கூறுங்கள். இன்று ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு என "கவுன்சிலிங் செல்" இருக்கின்றன. அங்கு இருப்பவர்களிடம் உங்கள் பிரச்னையை பகிர்வதன் மூலம் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். என்னுடைய பிரச்னையை நான் மூன்றாம் நபரிடம் தான் பகிர்வேன் என நீங்கள் நினைத்தால் ஒரு நல்ல மனநல ஆலோசகரை சந்தித்து உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.