Tamil Cinema: சினிமா துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள் போதிய அக்கறை இல்லாதது மற்றும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக பல உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு

மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவை சோகத்தில் இத்தகைய இயக்குனர்களின் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. உதாரணமாக, விமல் நடித்த காவல் படத்தை இயக்கிய நாகேந்திரன் கடந்த ஏப்ரல் மாதமும் மாரடைப்பு காரணமாகவும், ஒரு கிடாயின் கருணை மனு மூலம் இயக்குனரான சுரேஷ் சங்கையா மஞ்சள் காமாலையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார். இவர்கள் எல்லாம் குறைந்தது ஒரு படமாவது இயக்கியவர்கள். இதுபோக பலர் ஒரு படமாவது இயக்கிவிடமாட்டோமா என கோடம்பாக்கத்தில் ஓடி ஓடி கனவுகளுடனே மறைந்து போனவர்களும் பலர் உள்ளனர்.

உடல்நலனில் அலட்சியம்

இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,   இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு ஒரு குற்ற உணர்வை தந்து சென்றுள்ளது. ஒவ்வொரு நாளும் நிறைய இயக்குனர்களை சந்திக்கிறேன், அவர்கள் அனைவரிடமும் ஒரே பிரச்சனை தான்.  உடல் நலத்திற்கு குறைந்தபட்ச முக்கியத்துவம் கொடுப்பது. கனவு, சம்பளம், சாதனை என எல்லா மண்ணாங்கட்டிகளுக்கும் முன் உயிர் முக்கியம் என்பது உறைப்பதே இல்லை. என் எல்லா இயக்குனர்/ உதவி இயக்குனர்களிடமும் எனக்கு இதே போராட்டம்/சண்டை தான். 

இயக்குனர்கள் செய்யும் தவறுகளும், அதன் தீர்வுகளும். 

1. கதைவிவாதம் என்ற பெயரில் இரவு முழுக்க தூங்குவதே இல்லை. உடலுக்கான சீரான செயல்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் உடலில் எல்லாமே பிரச்சனை தான். முடிந்த வரை  குறைந்தது 12 - 6 தூங்குவதை எப்படியாவது உறுதி செய்ய வேண்டும். 

2. காலை உணவு சாப்பிடும் பழக்கமே இல்லை. தேநீர், சிகரெட் இருந்தா போதும் என சுத்துவது. 2 டீ 2 தம் குறைந்தது 50ரூ ஆகும். ஆனால் 30 ரூபாய்க்கே 2 இட்லி (அ) ஒரு ஆப்பிள், வாழைப்பழம் (அ) அதைவிட குறைந்த செலவில் தயிர் மற்றும் முளைக்கட்டிய தானியம் என சிறந்த உணவுகள் கிடைக்கும். ஆனாலும் காசு இல்லை, மூட் இல்லை என சிகரெட், தேநீர் என சாவை தேடிக்கொள்வது. சிகரெட் எப்படி Blood vesselல் அடைப்பை உறுவாக்கும்னு Google பண்ணி பாருங்க, அப்பறம் கை சிகரெட்டை தொடாது. 

3. 20 கிலோவுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என 70 கிலோவிற்கு 3 அரை லிட்டர் தண்ணி குடிப்பதை உறுதி செய்யவேண்டும். ஒரு நாளைக்கு 1/2 லிட்டர் டீயை மட்டும் குடித்துவிட்டு மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிப்பது மிகவும் ஆபத்தானது. வெள்ளை நிறத்தில் சிறுநீர் கழிக்கிறோம் என்பதையாவது தினமும் உறுதி செய்ய வேண்டும். இல்லைன்னா கிட்னி டரியலாகிவிடும். கிட்னி வேலை செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் ஹார்ட் அட்டாக் வரும். ஏன்னா கிட்னி தான் ரத்தத்தை சுத்தம் பண்ணி இதயத்திற்கு அனுப்பும். 

4. ஒல்லியாக இருந்தாலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் எந்நேரமும் கார்டியாக் அரெஸ்ட் ஆகலாம். அதனால் உடனே ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தில் Lipid profile எடுத்து பாருங்கள். கொலஸ்ட்ரால் 200க்கு மேல் இருந்தால் மருத்துவர் அறிவுரையுடன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 5. 40 வயதிற்கு மேல் படிப்படியாக Mutton/Beef போன்ற ரெட் மீட் உணவுகளை குறைக்க வேண்டும். கண்டிப்பாக இரவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. 6. குடிச்சா தான் சீன் வரும், தம் அடிச்சா தான் சீன் வரும்னு சீன் போடாமல் புகை/மது பழக்கங்களை நிறுத்தணும். 7. முடிஞ்சா வருஷத்துக்கு ஒரு complete Healthcheck பண்ணுங்க. Governmentல ஒரு 3500க்கே பண்ண முடியும்” என வலியுறுத்தியுள்ளார்.

கனவுகளை மெய்யாக்க கடுமையாக உழைக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால், அதற்கு உயிரும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இளம் மற்று உதவி இயக்குனர்கள் செயல்பட வேண்டும் எனபதே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.