Paresh Rawal: பரேஷ் ராவலின் பேச்சு உடலை தூய்மையாக்க கடுமையாக உழைக்கும் கிட்னிக்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பரேஷ் ராவல் சொன்னது என்ன?

 பாலிவுட் நடிகரும், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான பரேஷ் ராவல், தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், முழங்கால் காயத்தால் தான் பாதிக்கப்பட்டபோது பின்பற்றிய சிகிச்சை முறை குறித்து பேசினார். அதன்படி, “நான் விரைந்து குணப்பட்டு மீண்டு வருவதற்காக காலையில் நான் கழிக்கும் எனது முதல் சிறுநீரை நானே குடித்தேன். நான் அதைச் செய்ய வேண்டியிருந்ததால், நான் அதை பீர் என கருதி 30 நாட்களுக்கு குடித்தேன்” என பேசினார். அவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவர் குறிப்பிடுவது ஒரு மோசமான ஆலோசனை என மருத்துவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

”கிட்னியை அவமானப்படுத்தாதீர்கள்”

பரேஷ் ராவலின் பேச்சுதொடர்பாக, சமூக வலைதளங்களில் ”தி லிவர் டாக்” என அறியப்படும் சிரியாக் அப்பி பிலிப்ஸ் எனும் மருத்துவர் விரிவான மற்றும் காட்டமான விளக்கம் அளித்துள்ளார். அதில், “பாலிவுட் நடிகர் ஒருவர் சொல்வதால் உங்கள் சிறுநீரை (அல்லது மற்றவரது சிறுநீரை) குடிக்க வேண்டாம். சிறுநீர் குடிப்பத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என்ற கருத்தை ஆதரிக்க எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை. உண்மையில், சிறுநீர் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும், பாக்டீரியா, நச்சுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை ரத்த ஓட்டத்தில் கொண்டுவர வாய்ப்புள்ளது. உங்கள் சிறுநீரகங்கள் (கிட்னி) உங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை சிறுநீர் வழியாக அகற்ற மிகவும் கடினமாக உழைக்கின்றன. அதை மீண்டும் உள்ளே செலுத்துவதன் மூலம் கிட்னிக்களை அவமதிக்காதீர்கள்.

”வாட்ஸ்-அப் பூமர் அங்கிள்”

சிறுநீர் மலட்டுத்தன்மையற்றது அல்ல. சிறுநீர் என்பது உங்கள் உடல் அகற்ற முயற்சிக்கும் உப்புகள் மற்றும் ரசாயனங்களின் சக்திவாய்ந்த கலவையாகும். இந்த ரசாயனங்கள் நீங்கள் அவற்றை உட்கொண்டால் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பரேஷ் ராவல் இந்திய வாட்ஸ்அப் பூமர் அங்கிள் என்பதற்கு சரியான உதாரணம். ஊடக வெளிச்சம் தன் மீது விழ அவர் இதைச் சொல்கிறார்.” என தி லிவர் டாக் கடுமையாக சாடியுள்ளார். இவர் மட்டுமின்றி பல மருத்துவ வல்லுநர்களும், பரேஷ் ரவாலின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.