மலேரியா சிகிச்சைக்கு ட்யூமர் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி ட்யூமர் மருந்துகள் கல்லீரல் செல்களில் பல்கிப் பெருகும் மலேரியா நோயை தடுக்கவல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  


அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வுகளின்படி மலேரியா மனிதர்களை தாக்க 4 ஒட்டுண்ணிகள் கரணமாக இருக்கின்றன. Plasmodium falciparum, P. vivax, P. ovale, P. malariae ஆகியவை தான் அந்த 4 பாரசைட்டுகள். இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசியர் சைலஜா சிங் தலைமையிலான சென்டர் ஃபார் மாலிக்குலார் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள், மலேரியா சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டி எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தி சோதித்தனர். அப்போது அந்த மருந்து பாரசைட்டுகள் பல்கிப் பெருவதற்கு ஆதாரமாக விளங்கும் மையத்தை தடுப்பது கண்டறியப்பட்டது.


இந்த ஆய்வின் முடிவுகள் (American Society for Microbiology) அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோ பயோலாஜி என்ற மருத்துவ இதழில் பிரசுரம் ஆகியுள்ளது. அந்தக் கட்டுரையில் ஜேஎன்யு கண்டுபிடிப்பு மலேரியா ஒழிப்பில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மலேரியா தொற்று நோய்: 


மலேரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொசுவின் மூலம் பரவும் தொற்று நோயாகும். இது பிளாஸ்மோடியம் விவியாக்ஸ் (Plasmodium viviax -P. vivax), பிளாஸ்மோடியம் ஃபால்சிபரும் (Plasmodium falciparum-P. falciparum), பிளாஸ்மோடியம் மலேரியே (Plasmodium malariae-P. malariae) பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale-P. ovale) ஆகிய பாரசைட்டுகளால் ஏற்படுகின்றன. 


மனிதர்களுக்கு மலேரியாவைப் பரப்பும் இரு வகை ஒட்டுண்ணிகள் இந்தியாவில் பரவலாக அறியப்படுகின்றன (பிளாஸ்மோடியம் விவாக்ஸ், பிளாஸ்மோடியம்: பால்சிபரும்). பாரசைட்டைக் கொண்ட பெண் அனஃபெலஸ் இனக் கொசு கடிக்கும் போது, எச்சிலின் மூலமாக ப்ரொடிஸ்டா (விலங்கு-தாவர ஓரணு உயிர்) இரத்த ஒட்டத்தில் செலுத்தப்படுகிறது, இப் ப்ரொடிஸ்டா கல்லீரலை அடைந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. மலேரியா நோயின் அறிகுறிகளில் பொதுவாகக் காய்ச்சலும் தலைவலியும் இடம்பெற்று இருக்கும். கடுமையான நேர்வுகளில் இது ஆழ்மயக்கம் அல்லது மரணத்தில் முடியும். 


பொது சுகாதார பிரச்னை:  


தொற்று நோய்களில் மிகவும் அபாயகரமானது மலேரியா. இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நிமோனியா, டயோரியா நோய்களுக்குப் பிறகு அதிகமான குழந்தைகள் இந்த நோயின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.


இந்தியாவில் மலேரியா:  


இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா. மேலும், இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது.


2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது என்றும்,  இதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.