உசிலம்பட்டியில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை வாரத்தை முன்னிட்டு குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

 

தேசிய சுகாதார குழுமம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கினங்க மதுரை மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து இன்று முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு வாரமாகவும், நவம்பர் 28 முதல் டிசம்பர் 4ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யும் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 





இதன்படி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை வாரத்தை முன்னிட்டு குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்தும், அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து பிரச்சார வாகனத்தை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 



 

இந்த பிரச்சார வாகனம் உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட குழந்தைகள் நல துணை இயக்குநர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆண்களுக்கு வழங்கினர்.

 




சுகாதரத்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம்,”ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்கு தங்க தந்தை என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்க தந்தை திட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் கத்தியின்றி, இரத்தமின்றி அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் செய்து வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் பரிசாகவும், அத்துடன் அரசு நலத்திட்ட உதவிகளாக தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன்கள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. தங்க தந்தை திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பயன்பெற ஆண்கள் முன் வர வேண்டும். மனைவியின் மீது அதிக அன்பு கொண்ட கணவர்கள் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும். குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவங்களை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பிரசவம் முடிந்தவுடன் அதே மருத்துவமனையில் கணவனோ அல்லது மனைவியோ குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு ஒரு முறையும் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக ஒரு முறையும் மருத்துவமனைகளுக்கு சென்று கால விரையத்தை தடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கப்படும் சொத்து எதுவென்றால் இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது தான்” என்றனர்.