உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாமினை இன்று (22.11.2023) துவக்கி வைத்தார்கள்.
பின்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் அடிப்படைக் கல்வி மற்றும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதை நன்கறிந்ததுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, அதிகப்படியான கிராமப்புற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
அந்த வகையில், கிராமப்புற மாணவியர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் உயர்கல்வி 7.5 சதவீத இடஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், திறன்மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்களால், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி, மருத்துவம், பொறியியல், சட்டம், செவிலியர், மருந்தாளுநர் போன்ற பல்வேறு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் செலவிற்காக, மாவட்டந்தோறும் வங்கிகள் வாயிலாக மாபெரும் கல்விக் கடன் முகாம் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இன்றைய தினம், மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் முகாமிட்டுள்ளனர். எனவே, மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கின்ற கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து ரூ.4 இலட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் கல்விக் கடனும் பெற்று பயனடையலாம். நீங்கள் வங்கிகளுக்கு நேரிடையாக சென்று விண்ணப்பித்தால், ஏற்படும் கால இழப்பினை ஈடு செய்திடும் விதமாக கல்விக் கடன் முகாம் நடைபெற்று வருகிறது. எனவே, கல்விக் கடன் வேண்டுவோர் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறவேண்டும்.
இன்றைய தினம், 50 கல்லூரிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவியர்கள் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாமில் பங்கேற்றுள்ளனர். இதில், மருத்துவம், பொறியியல் பயிலும் 05 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்து திட்டங்களை நல்ல முறையில், பயன்படுத்தி நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு செல்வதோடு, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகின்ற அளவிற்கு தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாடகி சுசிலா அவர்களுக்கு முதல்வர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளார்கள். கல்லூரியில் முதல்வர் வேந்தராக இருப்பதனால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பரிந்துரைத்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரையா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. தமிழக முதல்வர் வேந்தராக இருப்பதால் சுசீலாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கினார்” எனத் தெரிவித்தார்.