நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


லியோ படம் 


கடந்த அக்டோபர் 19  ஆம் தேதி  செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்த ”லியோ” படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் 2வது முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா,  கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா,அர்ஜூன், ஜனனி, சாண்டி மாஸ்டர் என பலரும் நடித்துள்ளனர்.






அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருந்த நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கடும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. 


சமாளித்த படக்குழு


லியோ படம் ரிலீசுக்கு முன்னே பல பிரச்சினைகளை சந்தித்தது. அதேசமயம் ரிலீசான முதல் நாள் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஒருவார காலம் வசூல் குறித்து படக்குழு எந்த தகவலும் வெளியிடாதது சர்ச்சையை கிளப்பியது. மேலும் படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ தொடங்கியதும் புதுபுதுத் தகவல்கள் வெளியாகியது. அதிலும் பிளாஷ்பேக் காட்சி நடிகர் மன்சூர் அலிகான் மூலம் சொல்லப்பட்ட நிலையில் அதுவே பொய்யாக இருக்கலாம் என சொல்லப்பட்டதால் ரசிகர்கள் டென்ஷனாயினர். 


லியோ வெற்றி விழா


இப்படியான நிலையில் லியோ படம் விஜய் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.540 கோடி வரை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் அப்படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். வழக்கம்போல ரசிகர்களுக்கு குட்டிக்கதை சொல்லி அசத்திய விஜய், தனது அரசியல் வருகை குறித்து சூசகமாகவும் பதிலளித்தார். 


ஓடிடியில் ரிலீஸ் 


இதற்கிடையில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசாகின. இதனால் லியோ படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. ஆனால் ஜப்பான் படம் படுதோல்வி அடைந்த நிலையில் அப்படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டு பெரும்பாலான தியேட்டர்களில் லியோ படம் மீண்டும் திரையிடப்பட்டது. இந்நிலையில் லியோ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியாவில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்றும், உலகளவில் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 




மேலும் படிக்க: Legend Saravanan: ”எந்த பிரயோஜனமும் இல்ல” - ரஜினி,விஜய்யை கண்டித்த லெஜண்ட் சரவணன்..என்ன ஆச்சு?