தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகி உள்ளது. அது மேலும் வலுவடையும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

 

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 24ஆவது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை இல்லை என மாநகராட்சியை கண்டித்து கையில் துடப்பத்துடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 





 மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் மாநகராட்சியின் 80 சதவீத பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு  பொதுமக்கள் புகார் அளித்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதன்படி மதுரை மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்ட லெனின்தெரு , ஜீவா ரோடு ,  எம்ஜிஆர் தெரு , ராஜீவ் காந்தி தெரு, பூந்தமல்லி நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு காய்ச்சல் பரவல் ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் உருவாகி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.





இது குறித்து பலமுறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை மாநகராட்சியை கண்டித்து கையில் துடைப்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சாலையில் தேங்கியிருந்த கழிவுநீரின் முன்பாக நின்றபடி கையில் விளக்கமாறுடன் மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தல்  ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கும் கழிவுகளால் தொடரும் அவலத்தை பெண்கள் வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.