கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், தனது குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்ட வேண்டும் என்றும், மற்ற நேரத்தில் குழந்தையை 6 அடி தூரம் தள்ளி வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர் மஞ்சு பூரி கூறியுள்ளார்.
கர்ப்பக் காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றியும், கொரோனா பாதிப்பிலிருந்து பெண்களும், அவர்களது குழந்தைகளும் பாதுகாத்துக்கொள்ள என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் டெல்லி லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரியின், மகப்பேறு மருத்துவத் துறை, தலைவர் டாக்டர் மஞ்சு பூரி அளித்த பேட்டி..
கர்ப்ப காலத்திலும், பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு உதவும்?
கொரோனா இரண்டாம் அலையின்போது, பல பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு கடுமையானால், இது கர்ப்பக் காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும், குறிப்பாக, கடைசி மூன்று மாதங்களில் கருப்பை விரிவடைந்து உதரவிதானத்தில் அழுத்தி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு குறைத்து தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாலம். அந்த பெண்ணுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள் இதுபோன்ற தீவிரமான பாதிப்பை தடுக்க உதவும்.
தாய் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதன் மூலம் அவரது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி, கருவில் இருக்கும் குழந்தைக்கும் ரத்தம் மூலம் சென்று, பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய்ப்பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என சிலர் நம்புகின்றனர். இது உண்மையா?
இவையெல்லாம் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள். தவறான தகவல், தொற்றைவிட அதிக ஆபத்தானது.
கொரோனா தடுப்பூசிகள் புதியவை என்றாலும், பரிசோதனை தொழில்நுட்பங்கள் மூலம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. இது உடலின் மற்ற திசுக்களை பாதிப்பதில்லை. உண்மையிலேயே, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹெபாடிடிஸ் பி, இன்ப்ளூயன்சா, கக்குவான் இருமல் தடுப்பூசிகளை நாம் போடுகிறோம். இது தாயையும், கருவில் உள்ள குழந்தையையும் பாதுகாக்கிறது.
அதோடு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நமது மருத்துவ ஒழுங்குமுறையாளர்கள் அனுமதி வழங்கினர். தடுப்பூசிகள் மலட்டு தன்மை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. கொரோனா தடுப்பூசிகள், இனப்பெருக்க உறுப்புகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தாய், தனது பச்சிளம் குழந்தையை பாதுகாக்க என்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்?
ஒரு தாய் தனது குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மற்ற நேரத்தில் குழந்தையை தன்னிடமிருந்து 6 அடி தூரத்தில் பராமரிக்க வேண்டும். குழந்தையை கவனித்துக் கொள்ள, தொற்று பாதிப்பு இல்லாத நபரை வைத்துக் கொள்ளலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன், தாய் தனது கைகளை கழுவி, முகக்கவசம், முக தடுப்பான் போன்றவற்றை அணிய வேண்டும். தனது சுற்றுப்புறத்தை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தையை கவனிக்க ஆள் இல்லை என்றால், தாய் எப்போதும் முகக்கவசம் அணிந்து, குழந்தையிடம் இருந்து முடிந்தவரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தாயும், குழந்தையும், காற்றோட்டமுள்ள அறையில் தங்க வேண்டும். தாய் தனது கைகள் மற்றும் சுற்றுப்புறத்தை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.