ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில், இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது.
இன்று மாலை, இரண்டாவது டி-20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யபடவில்லை என்றால் இரண்டாவது டி-20 போட்டி நாளை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும். இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற சமன் நிலைக்கு வரும்.
இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ஷிகர்தவான், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். கடந்த போட்டியில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த பிரித்வி ஷா இந்த போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் ரன் மிகப்பெரிய அளவில் உயரும். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கவலையளிக்கிறது.
பந்துவீச்சைப் பொருத்தவரை துணைகேப்டன் புவனேஷ்குமார் அற்புதமாக பந்துவீசி வருகிறார். கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்தார். மேலும், ஹர்திக் பாண்ட்யாவும் வேகப்பந்துவீச்சில் துணையாக உள்ளார். சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் தொடர்ந்து அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவருக்கு துணையாக குல்தீப் யாதவ் உள்ளார்.
வலுவான இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும். இலங்கை அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மட்டுமே தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வருகிறார். அந்த அணியின் தூணாக தற்போது அவர்தான் உள்ளார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா இந்திய அணிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். சாஹல் இதுவரை இலங்கை அணிக்கு எதிராக 7 இன்னிங்சில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோர்டான் 8 இன்னிங்சில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்துவதன் மூலம் சாஹல் புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அணி வீரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.