நம் பிள்ளைகளுக்கு சமூக ஊடகங்களின் வெளிச்சத்தோடு அதன் நிழல்களையும் காட்ட வேண்டும். மன உளைச்சலை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்
”ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் - பல லட்சம் பின்தொடர்பவர்கள் கொண்டவர். சில நாட்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, கிண்டல்கள் அதிகரித்ததும், அவர் தன்னம்பிக்கையை இழந்தார். மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், இறுதியில் தற்கொலை என்ற துயரமான முடிவை எடுத்தார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒரு முக்கியமான உண்மையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வெற்றி மட்டுமல்ல... தோல்வியும் சமூக ஊடகங்களில் இருக்கிறது.
பின்தொடர்பவர்களை இழப்பதால் மன அழுத்தம் வருகிறதா?
ஆம்! இன்று லைக்குகள், ரீச், பின்தொடர்பவர்கள் ஆகியவை தன்மதிப்பின் அளவுகோல் ஆகிவிட்டன. ஒரு காணொளி பிரபலமாகவில்லை என்றால் சிலர் நிம்மதியையே இழக்கிறார்கள். சமூக ஊடக அழுத்தம் ஒரு உண்மையான மனநல பிரச்னை. இது வெறும் பிரபலங்களுக்கு மட்டுமல்ல. மாணவர்கள், இளம் தொழில்முனைவோர், பாடலாளர்கள், நடிகர்கள் என பலரும் இதைச் சந்திக்கிறார்கள்.
பெற்றோருக்கும் ஒரு கேள்வி
இன்று சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யூட்யூப், இன்ஸ்டாகிராமில் பிள்ளை புகழ் பெற வேண்டும் என்று தூண்டுகிறார்கள். ஆனால் முக்கியமான கேள்வி: வெற்றி கிடைத்த பிறகு கிண்டல்கள் வந்தால்? பின்தொடர்பவர்கள் குறைந்தால்? எதிர்மறையான கருத்துகள் வந்தால் அதை மனதளவில் எதிர்கொள்வதற்கான தைரியம் பிள்ளைகளுக்கு உண்டா? வெற்றியை எல்லோரும் போதிக்கிறார்கள் - தோல்வியை யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை! ஒரு தலைமுறை முழுவதும் வெற்றி மட்டுமே எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. ”முதல் தரம்” - ”முதல் பரிசு” ஒரு லட்சம் பின்தொடர்பவர்கள்”... ஆனால் இந்த இலக்குகளுக்கு எதிராக தோல்வி வந்தால் என்ன ஆகும்? நாம் வாழ்க்கையில் தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்கவில்லை என்பதே இன்று பல இளம் மனங்கள் உணர்ச்சிவசப்பட்டு உடைவதற்கான காரணம்.
கிண்டல்களும் தோல்வியும் சமூக ஊடகங்களின் ஒரு பகுதி
கிண்டல்கள் வந்தால் எப்படிச் சமாளிப்பது?, எதிர்மறையான கருத்துகளை எப்படிச் செரிப்பது?, சுய மதிப்பை ரீச்சிலும் லைக்குகளிலும் அளவிடக்கூடாது என்று எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்? இவை அனைத்தும் முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்.
மன உறுதி வளர்க்க வேண்டும்
ஒரு செல்வாக்கர் போலவே ஒரு மாணவனும், கலைஞனும், படைப்பாளியும் தோல்வியைச் சந்திக்கிறான். ஆனால் ஒருவன் பிரபலமானால் மட்டுமே மற்றவன் பேசப்படுகிறான். அதற்கான மன உளைச்சலுக்கு பிள்ளைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தயாராக இருக்க வேண்டும். உணர்ச்சித் தகுதி என்பது கல்விக்கும், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும் அத்தியாவசியமானது.
உண்மையை நம்மால் மறைக்க முடியாது
சமூக ஊடகங்களில் வெற்றி மட்டுமில்லை, கிண்டல்களும் இருக்கின்றன, பின்தொடர்பவர்கள் மட்டுமில்லை, விலகிச் செல்பவர்களும் இருக்கிறார்கள் ,லைக்குகள் மட்டுமில்லை, அவமானங்களும் வரும். இந்த உண்மையை நம்மை நாமே, பிள்ளைகளை நாம் கற்றுக்கொடுப்பதுதான் உண்மையான வெற்றிக்கான முதல் படி.
இன்றைய டிஜிட்டல் உலகில் இது அவசியம். ஒரு உயிர் பலியாவதற்கு முன்பே நாம் செயல்பட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு சமூக ஊடகங்களின் வெளிச்சத்தோடு அதன் நிழல்களையும் காட்ட வேண்டும். மன உளைச்சலை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் பல மதிப்புமிக்க உயிர்களைக் காக்க முடியும். அப்போதுதான் அவர்கள் உண்மையான வெற்றியாளர்களாக மாற முடியும்" என பிரபல மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் தெரிவிக்கிறார்.