தென் மாவட்ட மக்களின் நீண்ட கனவாக உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது நிறைவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பாறை கட்டிடம், ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 1624 கோடியாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்பட உள்ளது
கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது. எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த தென் மாவட்ட மக்களுக்கு தற்போது கடந்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான L&T நிறுவனம் சார்பில் முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் பணிகளை தொடங்கினர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சோலார் வசதி, கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக கட்டமைப்புகள் வரவுள்ளது
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டட பணிகள் 2026 ஜனவரியில் நிறைவடையும் என்றும், 2027-ம் ஆண்டு இரண்டாம் கட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக. மதுரை எய்ம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெலிகாபிட்டர் வந்து இறங்குவது போன்ற ஹெலிபேட் தளம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சோலார் வசதி, கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக கட்டமைப்புகள் உள்ளவாறு முதல் முறையாக முப்பரிமாண மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது.