இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் நாட்டைத் தாக்க கூடும் என  அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். 


கொரோனா வைரஸ் உருமாற்றமடையும் போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன என்றும் தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, கொரோனா வழிகாட்டு நடத்தை முறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதால் புதிய அலை உண்டாகிறது என்றும் கூறினார்.



  


குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தடுப்பூசி பெறும்வரை கொரோனா நடத்தைமுறையை நாம் கடுமையாக பின்பற்றவேண்டும். இல்லையெனில், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் மூன்றாவது அலை ஏற்படுத்தும் பெரும் சேதத்தை நாம் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நிலை தீர்வாக அமையுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பொது முடக்கங்கள், தடை உத்தரவுகள் எதற்கும் முழுமையாக தீர்வாக அமையாது. ஏற்கனவே, பொருளாதாரா நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சரியான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதே சிறந்த வழியாக அமையும்" என்று தெரிவித்தார். முன்னதாக, கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.  




கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு இணை நோய்த்தன்மை அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், லேசான பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படாமலே குணமடைந்தனர் என்றும் கூறப்பட்டது .முன்னதாக, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக உரிய ஆய்வுக்குப்பின் முடிவுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசின் தலைமைச் செயலர்களுக்கு  எழுதிய கடிதத்தில், "தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 


இருப்பினும், நாட்டின் பால்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. உதாரணமாக, கொரோனா ஊரடங்கை முழுவதுமாகத் தளர்த்தி தெலங்கானா மாநில அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும், ஜூலை 1 முதல் கல்வி நிறுவனங்களை அனைத்து வகையிலும் முழு ஆயத்தத்துடன் தொடங்கும் என்றும் தெரிவித்தது. 


இரண்டாம் அலை சரியத் தொடங்கியது: 


தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெருவாரியான மாநிலங்களில் கொரோனா தொற்று தினசரி வளர்ச்சி விகிதம் சரிந்தது.தேசிய அளவில் தொற்று வளர்ச்சி (-) 5.05 வளர்ச்சியாக உள்ளது. 


Telangana Lockdown : லாக்டவுனை திரும்பப்பெற்றது தெலங்கானா! - முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவிப்பு


நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 74 நாட்களுக்குப் பிறகு  7,60,019 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 2.55 சதவீதமாகும்.


சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,637 சரிந்துள்ளது.



தொடர்ந்து 37-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 74 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 7,60,019 ஆகக் குறைந்துள்ளது.  மேலும், நாட்டின் வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (Weekly Positivity rate) 3.58 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 2.98 (Daily Positivity Rate) சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 12 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் குறைவாக இருந்தால், சமூக அளவிலான பரவல் குறைந்திருப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது.    


KK Shailaja | கேரளாவின் ஷைலஜா டீச்சருக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது