KK Shailaja | கேரளாவின் ஷைலஜா டீச்சருக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது

மத்திய ஐரோப்பிய பல்கலைகழகத்தின் உயரிய விருது கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

உலகின் குறிப்பிடத்தக்க கல்வி அமைப்புகளில் ஒன்று மத்திய ஐரோப்பிய பல்கலைகழகம்.  இந்த மத்திய ஐரோப்பிய பல்கலைகழகத்தின் ஓபன் சொசைட்ட விருது உலகின் கவுரவமான விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விருதை ஐ.நா.வின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த கோபி அனன், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் இ ஸ்டிகிலிட்ஸ், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லனா அலெக்சிவிக், செக் குடியரசு நாட்டின் அதிபர் உள்பட உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர்.

Continues below advertisement

இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான மத்திய ஐரோப்பிய பல்கலைகழக ஓபன் சொசைட்டி உயரிய விருது கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிற்கு வழங்கப்பட்டுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஷைலஜாவிற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், நேற்று வியன்னாவில் அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது,  ஷைலஜாவிற்கான விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில், காணொலி காட்சி மூலமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசியபோது, மத்திய ஐரோப்பிய பல்கலைழகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதைப் பெறுவதில் நான் உண்மையிலே மிகுந்த தாழ்மையும், பெருமையும் அடைகிறேன். ஒரு விஞ்ஞான மனநிலையை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் எனது வலுவான கருத்தாகும். இது ஆர்வத்தின் அணுகுமுறையும், சீர்த்திருத்தத்திற்கான விருப்பத்தையும் உள்ளடக்கியது என்றார்.

மேலும், பட்டதாரி மாணவர்களாகிய நீங்கள் கற்றல் என்பது தொடர்ச்சியான செயல் என்பதால் ஆர்வத்துடன் இருக்கவும், அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு சமமான சமுதாயத்தை உருவாக்க புதிய ஆக்கப்பூர்வமான தீர்வுகளை ஒன்றாக உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மத்திய ஐரோப்பிய பல்கலைகழகத்தின் தலைவர் மைக்கேல் இக்னாட்டிப், ஷைலஜா டீச்சர் பெண்கள் பொது சேவையில் ஆர்வமுடன் செயல்பட முன்வருவதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.



2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கேரளாவில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜா, கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநிலத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொறடாவாக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் ஷைலஜா தனது ஆரம்ப வாழ்க்கையை பள்ளி ஆசிரியையாக தொடங்கியவர் என்பதால், அவரை அந்த மாநில மக்கள் அன்புடன் ஷைலஜா டீச்சர் என்று அழைக்கின்றனர்.

கடந்தாண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் முதல் அலையில் ஷைலஜா டீச்சர் சுகாதாரத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியதற்காக நாடு முழுவதும் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola