சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் மருத்துவத்திற்காக வருகின்றனர். இங்குள்ள இருதய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் எட்டு நாள் குழந்தைகள் முதல் 12 வயது சிறுவர், சிறுமியர் வரை சிக்கலான அறுவை சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வருகை தந்து வருகின்றனர். 



இந்த நிலையில் சேலம் மாவட்ட இடையீட்டு சேவை மையத்திலிருந்து உயர் சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த 20 மாத குழந்தைக்கு பிறவியிலேயே இருதய கோளாறு இருந்துள்ளது. குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை மற்றும் வால்வு அடைப்பு கண்டறிப்பபட்டது. இதனிடைய இருதய அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருடைய வயதிற்கு சராசரி எடை 11 கிலோ இருக்க வேண்டும், ஆனால் 7 கிலோ மட்டுமே இருந்ததால் வளர்ச்சிக் குன்றியிருந்தது. இதனால் அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சு திணறல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நவீன உபகரணங்கள் உதவியுடன் வெற்றிகரமாக இருதய கோளாறுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்த 3 வயதுடைய சிறுமிக்கு இதயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை துறையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவருடைய வயதுக்குரிய சராசரி எடை 15 கிலோ இருக்க வேண்டும், ஆனால் 10 கிலோ மட்டுமே குழந்தையின் எடை இருந்தது. மேலும் அடிக்கடி சளி தொந்தரவு மூச்சுத் திணறல் இருந்து வந்த நிலையில் ஹீமோகுளோபின் அளவும் குறைவாக இருந்ததால் அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளாமல், அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு ஹீமோகுளோபின் அளவு 9 வந்தவுடன் கடந்த மாதம் 6 ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.



தற்போது இரண்டு குழந்தைகளும் உடல்நலம் முன்னேறி நிலையில் இருவரும் வீடு திரும்பினர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம் அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் 15 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் இரு அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் மணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் செயல்பாடுகள் குறித்து அவர்களது பெற்றோரிடம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மணி கேட்டறிந்தார்.