சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள பிரபல மால் ஆம்பா ஸ்கைவான். புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த காரணத்தினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பி.வி.ஆர் திரையரங்கம் மட்டும் சில காலம் இயங்கிவந்தது. பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது முழுவதுமாக இயங்கிவருகிறது. இந்த மாலில் அமைந்துள்ள பிரபல உணவு விடுதி மற்றும் பி.வி.ஆர் திரையரங்கத்தில் சுகாதார பராமரிப்பு மிக மோசமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். 

நாத்தமடிக்கும் சீட் , பறக்கும் கரப்பான்பூச்சிகள்

பிராட் பிட் நடித்துள்ள F1 திரைப்படம் பார்க்க சென்றபோது திரையரங்கத்தில் இருக்கைகளில் இருந்து  துர்நாற்றம் அடித்தாகவும் வாடிக்கையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். கழிவறையில் உரினல் அடைத்து தேங்கி நின்றுள்ளது. ஹேண்ட் வாஷ் டிஸ்பென்ஸரில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பிரபல உணவு விடுதியான நம்ம வீட்டு வசந்த பவனில் கரப்பான்பூச்சிகள் பறந்து திரிந்ததை வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஊழியர்களிடம் சொல்லப்போனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது. அவர்கள் பேசுவது நமக்கு புரியாது. சென்னையில் பல கிளைகளை வைத்திருக்கும் பிரபல உணவு விடுதி நம்ம வீட்டு வசந்த பவன் ஒரு காஃபிக்கு ரூ 68 வசூலிக்கப்படும் இவ்வளவு பெரிய ஹோட்டலில் இப்படியான அடிப்படை குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டியவை. 

மிகப்பெரும் மல்டிபிளக்ஸ் நிறுவனமான பி.வி.ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியாவில் 111 நகரங்களில் 355 இடங்களில் 1744 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இதில் பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 93 இடங்களில் 519 திரைகள் இயக்கி வருகின்றன. நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் திரையரங்கில் இவ்வளவு மோசமான சுகாதார பராமரிப்பு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.