இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 1000-க்கும் கீழ் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 3000 கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 3,095 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4375 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3090 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் 2310 பேர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தமாக 777 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனால் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 2.61 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு சதவீதம் 1.91 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4.41 கோடியாக (4,41,71,551) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.78 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் சதவீதம்  1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த வாரம் 100க்கும் கீழ் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 139 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 88 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய முன் தினம் 123 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில்  முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் உலக சுகாதார மையம் தரப்பில் தடுப்பூசி போடும் விதிமுறைகளை மாற்றி வெளியிட்டுள்ளது.


முதல் பிரிவினர் ( high priority group):  வயதானவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பின் 6-12 மாதத்திற்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இரண்டாம் பிரிவினர் (medium priority group): இணை நோய் இல்லாத இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய் இருக்கும் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும் இந்த பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


மூன்றாம் பிரிவினர் ( low priority group): 6 வயது முதல் 17 வயது வரை இருப்பவர்கள் மூன்றாம் பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும் தேவைப்பட்டால் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி என்பது அனைத்து வயதினருக்கும் உகந்தது என உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது.