Screen Time: மொபைல் போனை பயன்படுத்தும் நேரத்தை குறைப்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மொபைலில் கழியும் 25 வருடங்கள்:
ஃப்ளூயிட் ஃபோகஸ் எனும் செயலி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மாணவர்கள் தினசரி சுமார் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் மொபைல் போனில் செலவழிப்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க போனில் செலவிடும் நேரமும் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி மாணவர்கள் தினசரி சராசரியாக 5 மணி நேரம் 12 நிமிடங்களும், பல்கலைக்கழக மாணவர்கள் 6 மணி நேரம் 12 நிமிடங்களும் போனை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 94 நாட்கள் என தங்களது வாழ்நாளில் 27.9 வருடங்களை பல்கலைக்கழக மாணவர்கள் இழப்பதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 18 கல்வி நிலையங்களில் 2 ஆயிரத்து 842 மாணவர்களிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஸ்க்ரீன் டைம் ஆபத்துகள் - கொந்தளிக்கும் மனைவிகள்
நீண்ட நேரம் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை பார்ப்பதன் மூலம், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக கண் சோர்வு, தூக்கமின்மை, உடல்பருமன் மற்றும் மனநலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நீண்ட நேரம் மொபைலில் மூழ்கி இருப்பது, குடும்ப உறுப்பினர்களுடனான உங்களது நெருக்கமும் குறையக்கூடும். இதுபோக, நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்துவிட்டு, வீட்டிற்கு வரும் கணவர்கள் செல்போனில் மூழ்கிவிடுவதாகவும், தங்களுடன் நேரம் செலவிடுவதில்லை என்றும், இன்றைய சூழலில் மனைவிமார்கள் பலர் கூறும் குற்றச்சாட்டாகவும் உள்ளது. பெற்றோரின் செல்போன் பழக்கம் குழந்தைகளுக்கும் தொற்றிக்கொண்டு, அவர்களையும் மின்சாதங்களுக்கு அடிமையாக்குகின்றன. அதிகப்படியான ஸ்க்ரீன் டைம் குடும்பத்திலேயே பிரச்னையை ஏற்படுத்துவதையும் இது உணர்த்துகிறது.
ஸ்க்ரீன் டைமை ஏன் குறைக்க வேண்டும்?
ஸ்க்ரின் டைமை ஏன் குறைக்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல, உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் செல்போனில் மூழ்கி ஒரே இடத்தில் இருப்பது உடலின் செயல்பாட்டை முற்றிலுமாக பாதிக்கிறது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடாமல் இருப்பது குடும்பத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகப்படியான பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவதால், மூளையில் சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படலாம்.
ஸ்க்ரீன் டைமை குறைப்பதற்கான ஆலோசனைகள்
1. குழந்தைகளுடன் விளையாடுங்கள்: வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். நகரமயமாக்கலில் சிக்கியுள்ள குழந்தைகள் விளையாட நேரமும், நண்பர்களுமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான முதல் நண்பர்களாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமையமாகும்.
2. மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்: இன்றும் பல வீடுகளில் மனைவிகள் கிட்சன்களிலேயே வாழ்நாளை கடத்தி வருகின்றனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியுடன் பேசுங்கள், நேரத்தை செலவிடுங்கள், சமையலறைக்கு சென்று சிறு சிறு உதவிகளை செய்யுங்கள். இது தம்பதியினரிடையேயான உறவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்ப சூழலையும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்.
3. நேரக்கட்டுப்பாடு: போனில் உள்ள செயலிகளுக்கு நேரக்கட்டுப்பாட்டை பயன்படுத்தலாம். ஒவ்வொரு செயலியையும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற வசதியை, செட்டிங்ஸில் சென்று நிர்ணயிக்க முடியும். இதன் மூலம், தினசரி போனுக்கு என ஒதுக்கும் நேரத்தை குறைக்கலாம்.
4. நோடிஃபிகேஷன்களை நிறுத்தலாம்: தேவை இருக்கிறதோ, இல்லையோ ஏராளமான செயலிகளை போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம். அவை நோடிஃபிகேஷன் கொடுக்கும் ஒவ்வொருமுறையும் தேவையில்லாவிட்டாலுன்ம் போனை எடுத்து பார்க்கிறோம். எனவே, தேவையில்லாத செயலிகளின் நோடிஃபிகேஷன்களை ஆஃப் செய்து வைப்பதும் நல்ல பலனை அளிக்கும்.
5. மாற்று பணிகளில் ஈடுபடுங்கள்: செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க, நீங்கள் உங்களது கவனத்தை செலுத்துவதற்கு ஏற்ற மாற்று பணிகளில் திட்டமிடுங்கள். குடும்பத்துடன் வெளியே செல்வது, வீட்டிலேயே சிறு நூலகம் அமைப்பது, குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான மற்றும் சிறு விளையாட்டு மண்டலத்தை வீட்டிலேயே ஏற்படுத்துவது, வாரத்தில் ஒருமுறையாவது கூடு அமர்ந்து பாட்டு பாடுவது, கதை சொல்வது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.
6. குழந்தைகள் மீது கவனம்: பெற்றோருக்கு தாமதமாக கிடைத்த போன்கள், இன்றைய தலைமுறைக்கு பிறந்தது முதலே கிடைக்கிறது. எனவே அவர்களது ஸ்க்ரீன் டைமை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கான முன்னுதாரணமாக இருந்து பெற்றோர் தங்களது பழக்க வழக்கங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுபோக, ஸ்க்ரீன் டைமை குறைக்க அறிவியல் பூர்வமாக பல ஆலோசனைகளையும் குறிப்பிடுகின்றனர். ஆனால், மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகள் எளிதானதாகவும், பின்பற்ற மிகவும் ஏற்றதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.