உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி புகையிலை இல்லா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் புகையிலை பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக பல முன்னெடுப்புகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புகைப்பழக்கத்தை பின்பற்றி பின்னர் அப்பழக்கத்தைவிட்ட தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார்?
அஜித்குமார்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தனது இளமை பருவம் முதல் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். எனினும் ஷாலினியை திருமணம் செய்து கொண்டபிறகு புகைப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டார்.
ரஜினிகாந்த்:
தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினி. இவர் தன்னுடைய தொடக்க காலத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் பழக்கத்தை தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அண்ணாமலை படத்தில் அமர்ந்து கொண்டு புகைப்பிடிக்கும் காட்சி பலரையும் ஈர்த்தது. எனினும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது முதல் சிகரெட் பிடிப்பதை அவர் அடியோடு நிறுத்திவிட்டார்.
கமல்ஹாசன்:
சினிமா உலகில் மிகவும் போற்றப்படும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன்தான். நடன கலைஞர், பாடகர், நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட மாபெரும் கலைஞர் கமல்ஹாசன். இவர் தனது 11 வயது முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். எனினும் அதில் இருக்கும் தீங்கை உணர்ந்து உடனடியாக புகைப்பிடிப்பதை கைவிட்டார்.
மம்மூட்டி:
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் மம்மூட்டி. இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பலரை போல் புகைப்பிடிக்கும் பழக்கத்துடன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய வாழ்வில் சிகரெட்டை தொடாமல் புகைப்பழக்கத்தை அடியோடு நிறுத்தியுள்ளார்.
'தமிழன்னு சொன்னாலே இந்த கேரக்டர்ஸ்தானா?'' - ஃபார்முலாவை மாற்றாத மலையாள சினிமாக்கள்!
மகேஷ் பாபு:
தெலுங்கு திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. இவர் புகைப்பழக்கத்திற்கு மிகவும் தீவிரமாக அடிமையாகி இருந்தார். எனினும் தன்னை பார்த்து தன்னுடைய ரசிகர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது என்பதற்காக அந்தப் பழக்கத்தை கைவிட்டார். அப்போது முதல் திரையிலும் நிஜ வாழ்கையிலும் அவர் புகைப்பிடிப்பதே இல்லை.
ராணா டகுபதி:
தெலுங்கு திரையுலகில் வலம் வரும் அசத்தலான நடிகர்களில் இவரும் ஒருவர். பாகுபலி படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தி ரசிர்களை அதிக ஈர்த்தவர். இவர் முதலில் சினிமா படங்களுக்காக புகைப்பிடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் புகைப்பழக்கத்திற்கு அப்படியே அடிமையாகி உள்ளார். பின்னர் மருத்துவரின் அறிவுரையை கேட்டு தற்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளார்.
விவேக் ஒபராய்:
நடிகர் விவேக் ஒபராய் தீவிர புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். இவர் மும்பையிலுள்ள புற்றுநோய் மருத்துவமனையை ஒருமுறை சென்று பார்த்துள்ளார். அங்கு இருக்கும் நோயாளிகளின் நிலை கண்டவுடன் இனிமேல் புகைப்பிடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். அப்போது முதல் அவர் கையில் சிகரெட்டை எடுக்கவில்லை.
ஜெயசூர்யா:
மலையாள நடிகர்களில் ஒருவர் ஜெயசூர்யா. இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 10 சிகரெட் வரை பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். அது அவருடைய உடல்நிலையை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தியுள்ளார்.
வெற்றி மாறன்:
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தன்னுடைய படத்திற்காக தேசிய விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார். இவரும் புகைப்பழக்கத்திற்கு முதலில் அடிமையாகி இருந்தார். பின்னர் படிப்படியாக அதை குறைத்தார். ஒரு முறை இதுகுறித்து அவர், "புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினமான ஒன்று தான். அதை யாரும் புரிந்து கொள்ளமுடியாது. எனினும் அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்று" எனத் தெரிவித்திருந்தார்.
”இவரின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்” - ரசிகர்களிடம் நடிகை சுனைனா வேண்டுகோள்