தமிழகத்தில் 35,000 என அதிகரித்து கொண்டிருந்த  தினசரி கொரோனா நோயின் பாதிப்பு கடந்த 24  மணிநேரத்தில், 28,864  என குறைந்துள்ளது . இருப்பினும் கொரோனா ஒரு நாள் இறப்பு விகிதம் இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழ் நாடு சுகாதாரத்துறை அறிக்கையின்படி கடத்த 24  மணிநேரத்தில் 493 கொரோனா நோயாளிகள் , கொரோனா நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர் . இதன் மூலம் தமிழ்நாட்டின் கொரோனா நோய்க்கான மொத்த உயிரிழப்பு 23,754 -ஆக உயர்ந்துள்ளது . குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24  மணிநேரத்தில் 337  புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாவட்டத்தின் மொத்த கொரோனா நோயினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4287-ஆக உயர்ந்துள்ளது .



கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் மரணங்கள் நகர் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளை மட்டும் குறிவைத்து இருந்த கொரோனா நோய் இப்பொழுது படு தீவிரம் அடைந்தது கிராம பகுதிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தை தடுப்பூசிகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று நம்பும் மத்திய,  மாநில  அரசுகள் , சிறப்பு கொரோனா தடுப்பூசி மையங்களை பட்டிதொட்டி முதல் கொண்டு நிறுவி வருகின்றது. என்னதான் மத்திய , மாநில அரசுகள் சிறப்பு தடுப்பூசி மையங்களை அமைத்தாலும் , பொது மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சிறிது தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த தயக்கத்தினை  நீக்கும் வகையில் , உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபர் ஒரு புதிய முயற்சினை மேற்கொண்டு வருகின்றார் .



கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட M குன்னத்தூர் பகுதியில் RT பாண்டியன் என்ற பெயரில் தனியார் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும்  தம்பிதுரை (வயது 30) என்ற இளைஞர் தான் இந்த கொரோனா காலகட்டத்திலும் இந்த சீரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக குன்னத்தூர் கிராமத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட சுகாதார துறையின் மூலம் நடந்து வந்தபோதிலும் , மிக சொற்ப எண்ணிக்கையிலான கிராமத்தினரே இதில் பங்கு எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் .


இதை கண்டு மிகவும் வருந்திய தம்பிதுரை , தனது கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு , தடுப்பூசி போட வரும் தனது கிராம மக்களுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் தருவதாக அறிவித்தார். அதன்படி தனது கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்பட நகல்களை தடுப்பூசி முகாமில் அங்கங்கே ஒட்டிவைத்ததோடு நில்லாமல் , தடுப்பூசி போட வரும் தனது கிராம மக்களுக்கு , பிளாஸ்டிக் குடம் , டிபன் பாக்ஸ் , எவர்சில்வர் டம்பளர் , எவர்சில்வர் கிண்ணம் என்று ,கிராம மக்கள் விரும்பும் ஏதாவது ஒரு பொருளை தடுப்பூசி செலுத்தியதற்கான சிறப்பு பரிசாக எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார் .



இதனை தொடர்ந்தது , கடந்த மூன்று நாட்களாக வெறும் இருபது நபர்கள்  மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் , பரிசு பொருட்கள் அறிவித்த இன்று ஒருநாள் மட்டும் குன்னத்தூர் கிராமத்தில் 75  கிராமத்தினர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தம்பிதுரையின் இந்த சீரிய முயற்சிக்கு , வருவாய் துறையினரும் , மருத்துவ துறையினரும் தங்களது சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பரிசு பொருட்களுக்காக மட்டும் இல்லாமல் , உயிர் காக்கும் இந்த தடுப்பூசி முகாமினை கொரோனா நோயினை வென்றெடுக்கக்கூடிய தளமாகப் பயன்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர், குன்னத்தூர் கிராம மக்களுக்கு வேண்டுகோளை  வைத்துள்ளனர் .