மொழி, எல்லை என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சிறகடித்து பறப்பது கலை. திரைப்படமோ, இசையோ உலகின் எந்த மூலையில் இருந்தும் யாராலும் ரசிக்கப்படலாம். குறிப்பாக இந்தியா பல மொழிகளை கொண்ட நாடு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சினிமாவும், இசையுமே இங்கு பல வகையாக நமக்கு கிடைக்கும். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகம் எல்லாவற்றையும் எல்லாரிடம் எளிதாக கொண்டு சேர்க்கின்றன. கேரளாவில் வெளியாகும் ஒரு திரைப்படத்திற்கு தமிழக இளைஞர்கள் ரைட்டப்பை எழுதி தள்ளுகின்றனர். தமிழ் திரைப்படம் என்றுமே கேரளாவில் கொண்டாட்டம்தான். ஆனால் திரையில் கையாளப்படும் மொழியின் மக்களை இந்த  திரைத்துறை எப்போதும் சரியாக கையாள்கிறதா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதும் உண்டு. அதில் எப்போதுமே மலையாள திரையுலகம் தெரிந்தே தெரியாமலோ ஒரு ஃபார்முலாவை கையாண்டுகொண்டே வருகிறது. அது தமிழர்கள் மீதான பார்வை.




நீங்கள் மிகத்தீவிர மலையாளப்பட ரசிகர் என்றால், அதிகமாக வேண்டாம், மம்முட்டி,  மோகன்லால் காலத்தில் இருந்து மலையாள சினிமாவை ஃபாலோ செய்யும் ஒருவர் என்றால் இங்கே குறிப்பிடுவதை மறுக்கமுடியாது. அப்போது முதல் போன வாரம் வந்த கள, ஆப்ரேஷன் ஜாவா வரையிலும் தமிழர்கள் மீதான பார்வை மலையாள சினிமாவில் என்னவாக இருக்கிறது  என்பதை உன்னிப்பாக பார்த்தால் கொஞ்சம் புரியும். மலையாள சினிமாக்களில் தமிழர்கள் என்ற கதாபாத்திரம் வந்தாலே அவர்கள் திருடர்கள், ரவுடிகள், பாலியல் தொழிலாளி, ஏழைகள், படிப்பறிவற்றவர்கள், கூலிகள் என இந்த பட்டியல் ஒரு வித எதிர்மறையாகவே செல்லும். பிரேமம் மலர் டீச்சர் எல்லாம் அதில் இருந்து தப்பித்தவர்கள்.


தமிழர்களை பாண்டிகள் என்ற அடைமொழியோடு ஏளனம் செய்வதும், பொள்ளாச்சி, திருநெல்வேலி, மதுரை என டெம்பிளேட் வில்லன் செட்டப்களை வைத்துக்கொண்டு அடித்து துவைப்பதும் மலையாள சினிமாவில் தொடர்கதை. இன்று நேற்று அல்ல. இது மம்முட்டி  காலத்தில் இருந்து துல்கர் சல்மான் காலம்வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 




சமீபத்தில் வெளியான ஆப்ரேஷன் ஜாவா படத்தில் சேலம் கோலமேடு பகுதி தான் திருட்டுக்கு பெயர் போன இடம் என்பதும், இப்போது படித்து முன்னேறிவிட்ட அவர்கள் சைபர் கிரைமில் திருடுகிறார்கள் என மீண்டும் ஒரு போடுபோடுவதும் என்னடா! இதுவென யோசிக்கத் தோன்றும். படிப்பு வந்தாலும் திருட்டை தொடர்கிறார்கள் எனும் எண்ணத்தை பதிவுசெய்யும் வசனமும், அதற்கான காட்சிகளும் படத்தின் கதை ஓட்டத்துக்கான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு படத்தின் கதைக்காக சில காட்சிகள், மனிதர்கள் வைக்கப்படுவது இயல்புதானே என்றாலும், இது ஒரு தொடர்கதையாக வருவதுதான் பலரையும் கேள்வி கேட்க வைக்கிறது. கள திரைப்படத்தில் கூலிக்கான வேலையாட்கள் முதல் டோவினோவை எதிர்க்கும் இளைஞன் வரை தமிழர் ரெஃபரன்ஸ்.சமீபத்தில் வந்த இரண்டு படங்கள்தான் இவை. ஆனால் 1980-களில் இருந்தே இந்த பார்வையும், படங்களும் நீண்டு கொண்டே வருகின்றன. போன வாரம் வரை.




மலையாள சினிமாக்களை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். இங்கும் 100 நாட்களை கடந்து ஓடிய மலையாள சினிமாக்கள் உண்டு. மலையாள நடிகர்களுக்கு இங்கு ரசிகர்கள்  கூட்டமுண்டு. தொழில் நுட்ப ரீதியாகவும் திரைத்துறையில்  மலையாளத்திற்கு தமிழ் முன்னோடியாகவே உள்ளது. நாட்கள் ஓடுகிறது,  இதுதான் வழக்கம் என ஒரு பார்முலாவை வைத்துக்கொண்டு அதேவழியில் பயணிப்பது காலப்போக்கில் கலையை நீர்த்துபோகச் செய்கிறது.


தமிழ்  திரைப்படங்களிலும் மதுரை என்றால் வெட்டுக்குத்து, வட சென்னை என்றால் திருட்டு, சேரி ,கேரள பெண்கள் என்றால் ஜாக்கெட், பாவாடை என ஒரே டெம்பிளேட்டை தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள். அதேமாதிரி ஒரு ஃபார்முலாவை தூக்கிக்கொண்டு மலையாள சினிமாவும் தமிழர்களை பயன்படுத்துகிறது.




இங்கு யாரும் எதையுமே வேண்டுமென்றே திணிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், காலம் காலமாக ஒரு பார்முலா படைப்பாளர்களுக்கே தெரியாமல் அவர்களை பின் தொடர்கிறது என்பதும், மனதின் அடுக்குகளில் இந்த பாகுபாட்டுப் படிவம் படிந்திருக்கிறது என்பதும்தான் சுட்டிக்காட்டப்படுகிறது. கலையில் மண், மொழி, மக்களை அதுவாக பிரதிபலிப்பது முக்கியமானது. ஏனென்றால் முன்பே சொன்னதுபோல மொழி, எல்லை என்ற வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ளாமல் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறது கலை. அது அனைவரிடத்திலும் சென்று சேரக்கூடியது.


30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!