கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என எந்த கல்வி நிலையமும் இயங்கவில்லை. இதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் இணைய வழியாக வகுப்புகளை எடுத்து வருகின்றனர், கடந்தாண்டு முதல் பல்வேறு கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களுக்கு இணையவழியிலே வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.


பல மாநிலங்களில் தனியார் பள்ளிகள் 1-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குகூட இணையவழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பிஞ்சுக்குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில், இணைய வழியில் வகுப்பால் மிகவும் வெறுப்படைந்த காஷ்மீரை சேர்ந்த 6 வயது மாணவி ஒருவர், பிரதமரிடம் இதுதொடர்பாக வீடியோ மூலமாக புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






காஷ்மீரைச் சேர்ந்த அந்த சிறுமி அந்த வீடியோவில், “ எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிவரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதற்கு பின்னர் கணினி வகுப்பு வரை நடத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்? என்ன செய்ய முடியும் மோடி ஐயா?” என தனது பிஞ்சுமொழிப் பேச்சால் விரக்தியுடன் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.